குத்துச்சண்டை வீரரை ஓட ஓட வெட்டி கொன்ற மர்ம கும்பல்... சென்னையில் பயங்கரம்

நள்ளிரவில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த குத்துச்சண்டை வீரரை மர்ம கும்பல் ஒன்று ஓட ஓட வெட்டி கொன்றுள்ளது.
குத்துச்சண்டை வீரரை ஓட ஓட வெட்டி கொன்ற மர்ம கும்பல்... சென்னையில் பயங்கரம்
Published on

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி ராஜாஜி நகர் கிருஷ்ணாம்பேட்டை மயான பூமி அருகே வசித்து வரும் ராஜேஷ்-ராதா தம்பதியரின் ஒரே மகன் தனுஷ் (24 வயது). குத்துச்சண்டை வீரரான இவர் தமிழ்நாடு சார்பில் பல்வேறு போட்டிகளில் கலந்து பதக்கம் வென்றுள்ளார். காவல்துறை தேர்வுக்கு தனுஷ் தயாராகி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏரியாவில் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதனால் காவல்துறை வேலைக்கு செல்ல முடியாமல் போயுள்ளது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த தனுஷை மர்ம கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி வெட்டி கொன்றுள்ளது. இதை தடுக்க சென்ற அவரது நண்பர் அருணையும் அந்த கும்பல் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஐஸ் ஹவுஸ் போலீசார் தனுசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த அவரது நண்பர் அருணையும் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

முன் விரோதம் காரணமாக தனுஷ் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com