நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய குட்டி யானை கொண்டு வரப்படுகிறது

புதிய குட்டி யானையின் படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
நெல்லை,
நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி என்ற பெண் யானை இருந்தது. அந்த யானை சமீபத்தில் உயிரிழந்தது. இதையடுத்து கோவிலுக்கு புதிய யானை வாங்க வேண்டும் என்று பக்தர்கள், பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறை இணைந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து புதிய யானைக்குட்டி ஒன்றை வாங்கி வருவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில் புதிய குட்டி யானையை கொண்டு வருவதற்கு தேர்வு செய்திருப்பதாக தெரிகிறது. அந்த யானையை உத்தரகாண்டில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் கொண்டு வந்து அங்கிருந்து லாரி மூலம் நெல்லைக்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நெல்லையப்பர் கோவிலுக்கு கொண்டு வரப்பட உள்ள புதிய குட்டி யானை படம் நேற்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகையில், "உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து நெல்லையப்பர் கோவிலுக்கு யானைக்குட்டி கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய குட்டி யானை நெல்லையப்பர் கோவிலுக்கு வந்து சேரும்" என்றனர். நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய குட்டி யானை கொண்டு வரப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






