முல்லை பெரியாற்றில் புதிய அணை; கேரள அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு துணை போகக்கூடாது - டி.டி.வி.தினகரன்

முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு துணை போகக் கூடாது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

மத்திய நீர்வளத்துறையின் அணைப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் கேரள அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து 12 மாதங்களில் ஆய்வு செய்ய பரிந்துரைத்திருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

மத்திய அரசின் அணைப் பாதுகாப்பு சட்டத்தின்படி முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்வதற்கான கால அவகாசம் 2026 ஆம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், 12 மாதங்களில் அணையின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய பரிந்துரைக்க வேண்டிய அவசியம் என்ன? என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த ஆய்வு எனும் பெயரில் தென் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தோடு மாநில உரிமை பறிபோகும் சூழல் ஏற்படும் நிலையிலும், மவுனம் காப்பது தமிழக விவசாயிகளுக்கு தி.மு.க. அரசு இழைக்கும் துரோகம் ஆகும்.

எனவே, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஆய்வு செய்வதற்கு வழங்கப்பட்டிருக்கும் பரிந்துரையை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசிற்கு துணை போகக் கூடாது எனவும் நீர்வள ஆணையத்தையும், மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com