உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..! தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

மிக கனமழை பெய்யும் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையையும், கனமழை பெய்யும் இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையையும் விடுக்கப்பட்டுள்ளது.
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..! தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
Published on: 

சென்னை,

வடகிழக்கு பருவமழை காலத்தின் முதல் புயல் வங்கக்கடலில் நாளை (23-ந்தேதி) உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக கனமழை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் மிக கனமழையும், 13 மாவட்டங்களில் கனமழையும், அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் எம்.ஜி.ஆர். நகரில் 15.4 செ.மீ. மழை பெய்தது.

வடகிழக்கு பருவமழை

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும்? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் துரை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்ப குதி உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. இருப்பினும், தென் மாவட்டங்களில் மிககனமழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதுமட்டு மல்லாமல், வருகிற 26-ந்தேதி வரை தமிழகத்தில் அனேக இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரையில், நாளை (அதாவது இன்று) மற்றும் 24-ந்தேதிகளில் மிதமான மழைக்கும். 25-ந்தேதி கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேலும் வலுவடைந்து மேற்கு தென் மேற்கு திசையில் நகரும்.

இந்த நிகழ்வு தொடர்ந்து வலுப்பெற்று புயலாகவும் மாறுவதற்கு சாதகமான சூழல் அதிகமாகவே இருக்கிறது. அந்த புயலின் தாக்கம் தமிழகத்துக்கு இருக்காது. பின்னர் அதுதொடர் பான அறிவிப்பு தெரிவிக்கப்படும்.

அரபிக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஏற்கனவே உருவாகி இருந்தது. அது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து சோமாலிய கடற்கரைப் பகுதிகளை நோக்கி சென்றது. நவம்பரில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாகவே பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், இந்த ஆண்டும் பருவமழை ஜனவரி மாதம் 2-வது வாரம் வரை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

17 மாவட்டங்களில் மிக கனமழை

தமிழகத்தில் வருகிற 26-ந்தேதி வரை மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், இன்று (வியாழக்கிழமை) தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சிவ கங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழையும், திருச்சி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர். நாமக்கல், விழுப்புரம், திருப்பூர், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி மின்னல் மற்றும் காற்றுடன் கனமழையும், ஏனைய தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை

நாளை (வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி. தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை வானிலை ஆய்வு மையம் நிர்வாக ரீதியாக மிக கனமழை பெய்யும் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையையும், கனமழை பெய்யும் இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘முரசு புயல்'

தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை (அக்.23) புதிதாக உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று புயலாக மாறினால் அதற்கு ‘முரசு புயல்' என பெயர் சூட்டப்படும். வங்கக் கடல், அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கான பெயரை சூட்டும் குழுவிடம் இந்தப் பெயரை இந்தியா பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com