குற்ற வழக்கில் சிக்கியவர் போலீஸ் வேலைக்கு உரிமை கோர முடியாது - ஐகோர்ட்டு கருத்து

குற்ற பின்னணி குறித்து விசாரிக்காமல் போலீஸ் வேலைக்கு ஆட்களை சேர்த்தால், இன்னொரு சாத்தான்குளம் சம்பவம் நடக்க அதிக வாய்ப்புள்ளது என்றும், குற்ற வழக்கில் முன்பு சிக்கிய மனுதாரர் போலீஸ் வேலைக்கு உரிமை கோர முடியாது என்றும் சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்து தீர்ப்பு அளித்துள்ளது.
குற்ற வழக்கில் சிக்கியவர் போலீஸ் வேலைக்கு உரிமை கோர முடியாது - ஐகோர்ட்டு கருத்து
Published on

சென்னை,

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், விழுப்புரம் மாவட்டம், கணை போலீஸ் நிலையத்தில் என் மீது 2016-ம் ஆண்டு மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் புகார்தாரர் சமரசமாக போவதாக கூறியும், அதை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு ஏற்கவில்லை. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி என்னை கவுரவ விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.

இதையடுத்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவலர் பணிக்கு விண்ணப்பம் செய்து எல்லா போட்டிகளிலும் தேர்ச்சி பெற்றேன். போலீஸ் சரிபார்ப்பின்போது, என்னை விடுதலை செய்த தீர்ப்பு நகலை போலீசாரிடம் கொடுத்தேன். இந்த நிலையில் என்னை போலீஸ் பணிக்கு சேர்க்க முடியாது என்று கூறி கடந்த மார்ச் 23-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எனக்கு போலீஸ் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத், மனுதாரர் குற்ற வழக்கில் சந்தேகத்தின் பலனாகத்தான் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் போலீஸ் வேலை கேட்டு உரிமை கோர முடியாது. வேலைக்கு விண்ணப்பம் செய்யும் போது குற்ற வழக்கு விவரம் குறித்து குறிப்பிடவில்லை.

சான்றிதழ் சரிபார்ப்பின்போது தான் இந்த விவரம் தெரியவந்துள்ளது. எனவே இவருக்கு வேலை வழங்குவது என்பது அதிகாரிகளின் விருப்பமே தவிர, அதில் மனுதாரர் உரிமை கோர முடியாது என்று வாதிட்டார். மனுதாரர் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் விண்ணப்பம் செய்யும்போது குற்றவழக்கு விவரத்தை குறிப்பிடவில்லை. சரிபார்ப்பு பணியின்போது தான் இந்த விவரம் தெரியவந்துள்ளது. மேலும் அவர் மீதான குற்ற வழக்கின் தீர்ப்பை படித்துப்பார்க்கும்போது, அவர் சந்தேகத்தின் பலனாக தான் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது. அண்மை காலமாக தமிழக காவல்துறை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

மனுதாரர் போன்றவர்களின் குற்றப்பின்னணி, குணம் உள்ளிட்டவைகளை ஆராயாமல், போலீஸ் வேலை கொடுத்தால், இன்னொரு சாத்தான்குளம் சம்பவம் (விசாரணைக்கு போலீசாரால் அழைத்துச்செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்) நடக்க அதிக வாய்ப்புள்ளது. சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள பல்வேறு தீர்ப்புகளின் அடிப்படையில் ஒழுக்கம் சார்ந்த பணியான போலீஸ் வேலைக்கு, குற்ற வழக்கில் முன்பு சிக்கிய மனுதாரர் உரிமை கோர முடியாது. எனவே, வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com