கோவையை சேர்ந்தவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

சென்னை வேப்பேரி போலீஸ் நிலைய சுற்றுச்சுவர் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் கோவையில் நோட்டீஸ் ஒட்டினர்.
கோவையை சேர்ந்தவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
Published on

கோவை

சென்னை வேப்பேரி போலீஸ் நிலைய சுற்றுச்சுவர் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் கோவையில் நோட்டீஸ் ஒட்டினர்.

வெடி குண்டு வழக்கு

சென்னை வேப்பேரி போலீஸ் நிலைய சுற்றுச்சுவர் கடந்த 1997-ம் ஆண்டு வெடி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசின் சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது கோவை செல்வபுரம் கல்லாமேடு மட்டசாலை பகுதியை சேர்ந்த அயூப் என்கிற அஷ்ரப் அலி (வயது 47) என்பது தெரியவந்தது.

இதற்கிடையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த அஷ்ரப் அலி 1997-ம் ஆண்டு முதல் தலைமறைவானார். இது தொடர்பான வழக்கு சென்னை 2-வது கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அஷ்ரப் அலியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தார். மேலும் வருகிற 16-ந் தேதி சென்னை எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு

இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி.யின் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு நல்லதுரை தலைமையில் இன்ஸ்பெக்டர் எழிலரசி, சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் கோவை வந்தனர். பின்னர் அவர்கள் கோவை செல்வபுரம் பகுதியில், அஷ்ரப் அலி வசித்த வீடுகள் மற்றும் அந்த தெருவில் சென்னை கோர்ட்டு உத்தரவின் நகல் மற்றும் நோட்டீஸ்களை ஒட்டினர். மேலும் ஒலிபெருக்கி மூலம் வெடிகுண்டு வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் குறித்து அறிவிப்பு வெளியிட்டனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

சென்னை வேப்பேரி போலீஸ் நிலைய சுற்றுச்சுவர் கடந்த 1997-ம் ஆண்டு வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இந்த சம்பத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த போது கோவை செல்வபுரத்தை சேர்ந்த அஷ்ரப் அலி இதில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் தேடுவதை அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார்.

தொடர்ந்து இவருக்கு பிடிவாரண்ட் அளிக்கப்பட்டும், அவர் தலைமறைவாக பதுங்கி இருக்கிறார். இந்த நிலையில் வருகிற 16-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும் என்று கோவையில் அவர் வசித்த பகுதி மற்றும் உறவினர் வீடுகளின் சுவரில் நோட்டீஸ் ஒட்டி வருகிறோம். மேலும் அந்த பகுதி பொதுமக்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவர் குறித்த விவரம் தெரிந்தால் போலீசில் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிப்பவரின் விபரம் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுதவிர அஷ்ரப் அலி மீது சென்னையில் கடந்த 1998-ம் ஆண்டு ஹூசைன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கும், கேரளாவில் திருச்சூர் உள்ளிட்ட இடங்களில் குண்டு வெடித்த வழக்கில் தொடர்பு உள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com