பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் முதல்-அமைச்சராக வேண்டும் - சிதம்பரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

அரசியல் காரணங்களுக்காக பட்டியல் சமுதாய உறவுகள் 200 பிரிவுகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சிதம்பரம்,
ஆன்மிக தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான சுவாமி ஏ.எஸ். சகஜானந்தரின் 135 -வது பிறந்தநாள் விழா சிதம்பரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
பிரிட்டிஷ் ஆட்சியில் மிகவும் துன்பகரமான சமூக-அரசியல் மற்றும் கலாசார சூழல் நிலவியது. அக்காலத்தில் சுவாமி சகஜானந்தர் சமூகத்தைக் காக்கவும், ஒதுக்கப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் வாழ்வை மேம்படுத்தவும் தோன்றினார். நமது பாரத கலாசாரத்தையும் அடையாளத்தையும் அழிக்க நமது சமூகத்தின் மீது இரண்டு விரோத வெளிப்புற சக்திகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அவற்றில் ஒன்று சித்தாந்தம், மற்றொன்று இறையியல். இந்த சக்திகளுக்கு முக்கிய இரையாகியது பின்தங்கிய சமூகம்.
அந்த சக்திகளுக்கு சவால் விடுக்கும் வகையில் சுவாமி சகஜானந்தர், தலித் சமூகத்தில் இருந்து வந்த சிறந்த நாயனார் துறவிகளில் ஒருவரும் கவிஞருமான நந்தனாரால் ஈர்க்கப்பட்டு, சுரண்டலுக்கு எதிராக ஒடுக்கப்பட்டவர்களையும் பின்தங்கியவர்களையும் அணி திரட்டி நமது ஆன்மிக மற்றும் கலாசார பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன கல்வி மூலம் அவர்களுக்கு அதிகாரம் கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.
நாடு சுதந்திரம் அடைந்து சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, நமது தலித் சகோதர, சகோதரிகள் அனுபவிக்கும் அனைத்து வகையான சமூக பாகுபாடுகள் மற்றும் அட்டூழியங்களை முறியடிக்க, சுவாமி சகஜானந்தரின் போதனைகளை ஏற்றுக்கொள்வது அவசியம். சில வலிமையான சுயநலவாதிகள், சுவாமி சகஜானந்தர் பற்றியும், ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கான அவரது சிறந்த சேவை பற்றியும் நமது வரலாற்றில் இருந்தும் மக்களின் நினைவிலிருந்தும் அழிக்க முயல்கின்றனர்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் முதல்-அமைச்சராக வேண்டும். பட்டியலின ஊராட்சி தலைவர்கள் நாற்காலியில் அமர முடியாத நிலை உள்ளது. சில இடங்களில் பட்டியலின மக்கள் காலணி அணிந்து நடக்க முடியவில்லை. அரசியல் காரணங்களுக்காக பட்டியல் சமுதாய உறவுகள் 200 பிரிவுகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். பட்டியலின மக்கள் கொல்லப்பட்ட கீழ்வெண்மணியில் இதுவரை மக்களுக்கு நல்ல வீடுகள் இல்லை. சகஜானந்தரின் கனவை நனவாக்க பட்டியலின மக்களை முன்னே கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






