

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தேவமங்கலம் வ.உ.சி. நகரை சேர்ந்த கருணாநிதியின் மகன் சந்தோஷ்(வயது 22). இவர் சிலால் நால்ரோடு அருகில் தேவமங்கலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தேவமங்கலம் பகுதியில் அடுத்தடுத்து மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் அடியோடு சாய்க்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த கிராமத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு ராஜ சோமசுந்தரம் உத்தரவின்பேரில் தா.பழூர் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், நிக்கோலஸ் மற்றும் போலீசார் சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து தேவமங்கலம் கிராமத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சந்தோசை தாக்கிய வழக்கில் தேவமங்கலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வேல்முருகன்(19) கைது செய்யப்பட்டார். இதற்கிடையே போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், தேவமங்கலம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்த ஜெயங்கொண்டத்தை அடுத்த கழுவந்தோண்டியை சேர்ந்த செல்லதுரையின் மகன் சக்திவேல் (26) என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை அடியோடு சாய்த்துவிட்டு சொந்த ஊருக்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து சக்திவேலை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.