உதவித்தொகை கிடைக்காமல் தவிக்கும் மாற்றுத்திறனாளி

கறம்பக்குடி அருகே விபத்தில் கை, கால் செயல் இழந்த வாலிபர் மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை கிடைக்காமல் தவித்து வருகிறார். தன்னை கருணை கொலை செய்யுமாறு அவர் வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
உதவித்தொகை கிடைக்காமல் தவிக்கும் மாற்றுத்திறனாளி
Published on

விபத்து

கறம்பக்குடி அருகே உள்ள மைலங்கோன்பட்டி சொரத்தான் தெருவை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 34). இவருக்கு திருமணமாகி திருச்செல்வி என்ற மனைவியும், 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் பாலச்சந்திரன் கடந்த பிப்ரவரி 25-ந் தேதி கூலி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பாலச்சந்திரனுக்கு ஒரு கை, ஒரு கால் பாதிக்கப்பட்டது. கால் பகுதியில் ஸ்டீல் பிளேட் வைக்கப்பட்டு கால் ஊன்றி நடக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஒரு கை செயலிழந்த நிலையில் எந்த வேலையும் பார்க்க முடியாத நிலையில் உள்ளார்.

கருணை கொலை செய்யுங்கள்

இந்நிலையில் புதுக்கோட்டையில் உள்ள மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் தனக்கு உதவித்தொகை வழங்க பாலச்சந்திரன் விண்ணப்பம் கொடுத்து உள்ளார். அவருக்கு மாற்றுத்திறனாளி அட்டை மட்டும் வழங்கப்பட்டது. உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.

கூலி வேலைக்கு செல்லமுடியாமல் வருமானம் இன்றி மனைவி, குழந்தைகள் வறுமையில் தவிப்பதை கண்டு விரக்தி அடைந்த பாலச்சந்திரன் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் அரசு அலுவலகங்களுக்கு மனு கொடுத்து அலைந்து திரிந்து ஓய்ந்து விட்டதாகவும், மாற்றுத்திறனாளி ஆகிவிட்ட தன்னை தொடர்ந்து அரசு நிர்வாகம் அலட்சியப்படுத்துவதாகவும், மனைவி, குழந்தைகள் பசி பட்டினியால் வாடுவதை பார்ப்பதை விட இறப்பதே மேல். எனவே என்னை கருணை கொலை செய்யுங்கள் என குறிப்பிட்டு உள்ளார். இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com