

சென்னை,
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்த ஷீபாராணி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறியிருந்ததாவது:-
எனது தந்தை மு.க.முத்து (தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன்), எனது தாயாரை 1988-ம் ஆண்டு இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டு கோபாலபுரத்தில் வசித்து வந்தார். இவர்களுக்கு மகளாக 1991-ம் ஆண்டு நான் பிறந்தேன். அதன் பிறகு, சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் உள்ள வீட்டில் தாய், தந்தையுடன் வசித்து வந்தேன்.
அப்போது, அங்கு ரவுடிகளுடன் வந்த எனது தந்தையின் மூத்த மனைவியின் மகன் அறிவுநிதி என்னையும், எனது தாயாரையும் தாக்கி வீட்டில் இருந்த பொருட்களை வெளியே வீசி வீட்டை அபகரித்துக் கொண்டார். இதன்பின்பு, நானும், எனது தாயாரும் ஆவடியில் தங்கியிருந்தோம். 1997-ம் ஆண்டு சென்னை பாலவாக்கத்திலும், 2015-ம் ஆண்டு திருவாரூரிலும் என் தந்தையை பார்த்தேன்.
கடந்த 3 ஆண்டுகளாக என் தந்தையை பார்க்க முடியவில்லை. எனது தந்தையை அறிவுநிதி சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளார். எனவே, எனது தந்தையை மீட்டு, ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.முத்து தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நான் மகன் அறிவுநிதியுடன் இருந்து வருகிறேன். மகனுடன் தங்கியிருப்பது சட்டவிரோத காவல் கிடையாது. சட்டவிரோத காவலில் இருப்பதாக மனு தாக்கல் செய்து இருப்பது தவறானது. இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
விசாரணையின் போது ஷீபாராணி, தான் மு.க.முத்துவின் மகள்தான் என்றும், மரபணு பரிசோதனைக்கு(டி.என்.ஏ.) தயாராக இருப்பதாகவும் கூறினார். இதற்கு சம்பந்தப்பட்ட கோர்ட்டு மூலம் பரிகாரம் தேடிக்கொள்ளும்படி நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதன்பின்பு மு.க.முத்துவின் பதில் மனுவை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ஷீபாராணி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.