ரூ.25 லட்சத்தில் விளையாட்டு மைதானம்

வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் ரூ.25 லட்சத்தில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்.
ரூ.25 லட்சத்தில் விளையாட்டு மைதானம்
Published on

விளையாட்டு மைதானம்

வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தனது சொந்த நிதியில் இருந்து ரூ.25 லட்சத்தில் விளையாட்டு மைதானம் அமைத்து கொடுத்தார். அதன் திறப்பு விழா நேற்றுநடைபெற்றது. மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். அரக்கோணம் தொகுதி எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. முன்னிலை வகித்தார்.

அமைச்சர் ஆர்.காந்தி விளையாட்டு மைதானத்தை திறந்துவைத்து மாணவிகளுடன் விளையாடினார். பின்னர் அவர் பேசியதாவது:-

மதில்சுவர்

இந்த கல்லூரி பேரறிஞர் அண்ணா ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. 4,000 மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் மாணவிகளுக்கான விளையாட்டு மைதானம் வேண்டுமென கடந்த ஆட்சிக்காலத்தில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபொழுது என்னிடம் கல்லூரி நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்தனர். நான் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினரிடம் இக்கல்லூரிக்கு ஏதாவது உதவி செய்திடுமாறு கோரினேன். உடனடியாக ரூ.5 லட்சத்தினை வழங்கினார். அதனுடன் என்னுடைய சொந்த நிதி ரூ.20 லட்சத்தினையும் சேர்த்து ரூ.25 லட்சத்தில் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

நம்முடைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர், மாணவ- மாணவிகளின் விளையாட்டினை மேம்படுத்துவதற்காக சிறப்பாக செயல்பட்டு வருகின்றார். விளையாட்டு மைதானத்தினை சுற்றிலும் மதில் சுவர் கட்ட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு கூடிய விரைவில் மதில்சுவர் கட்டித்தரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கல்லூரி மாணவிகளின் விளையாட்டுக்காக கான்கிரீட் கட்டமைப்புடன் கூடிய கூடைப்பந்து மைதானம் மற்றும் சமன் செய்யப்பட்ட மண் மைதானங்கள், கைப்பந்து, பூப்பந்து, வாலிபால், கோ-கோ மற்றும் கபடி மைதானம் என மொத்தம் 6 மைதானங்கள் கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சரின் நிதியிலிருந்து அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மைதானபணிகளை கண்காணித்து சிறப்பாக அமைத்துக் கொடுத்த ராணிப்பேட்டை அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணனை பாராட்டி, அமைச்சர் சால்வை அணிவித்து ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஜி.கே. உலகப்பள்ளி மேலாண்மை இயக்குநர் வினோத்காந்தி, வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், வாலாஜா நகர மன்ற தலைவர் ஹரிணி தில்லை, பெல் நிறுவன மனிதவள மேலாண்மை மேலாளர் செல்வம், கல்லூரி முதல்வர் சீனிவாசன், விளையாட்டு ஆசிரியர் பாலகிருஷ்ணன், பூங்குழலி மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com