

நாகர்கோவில்,
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. எனவே பொதுக்கூட்டங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வருகை, பிரசார பயணங்கள் உள்ளிட்டவை தொடங்கி உள்ளன. எனவே இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கூட்டத்தை கண்காணித்து கட்டுப்படுத்தவும், விழாக்களில் பாதுகாப்பு பணிக்காகவும் மற்றும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுப்பதற்காக நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட போலீஸ் வாகனம் தயார் செய்யப்பட்டு உள்ளது.
இந்த பாதுகாப்பு வாகனத்தை நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் வைத்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நேற்று தொடங்கி வைத்து போலீசாரிடம் ஒப்படைத்தார். வாகனத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் நவீன கேமரா சுழலும் தன்மை கொண்டது. இதனால் பல இடங்கள் பதிவாகும் வசதி உள்ளது. அதோடு ஒலிப்பெருக்கியும் உள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்போது அங்கு நடைபெறும் நிகழ்வுகளை படம்பிடித்து பாதுகாப்பு பணியில் சிறப்பாக ஈடுபட முடியும்.
மேலும் ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக புதிய அறையையும் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், ஆயுதப்படை துணை சூப்பிரண்டு சாம் வேதமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.