

நாசரேத்:
நாசரேத் அருகில் உள்ள கடையனோடை வாய்க்கால் பகுதியில் மீன் பிடிப்பதற்காக ஒருவர் வலையை விரித்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் வாய்க்காலில் குளிக்க வந்தவர்கள் மீன்பிடி வலையில் மலைப்பாம்பு ஒன்று சிக்கியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் கனிமொழி அரசு மற்றும் வனவர்கள் கருணாகரன், சுரேஷ் வனக்காப்பாளர் சக்திவேல், வன காவலர் அபிஷேக் ஆகியோர் விரைந்து வந்து வலையில் சிக்கி இருந்த மலைப்பாம்பை பிடித்தனர். இந்த மலைப்பாம்பு 8 அடி நீளமாக இருந்தது. இந்த பாம்பு இந்திய ராக் பைதான் எனும் அரிய வகை மலைப்பாம்பு என வனத்துறையினர் தெரிவித்தனர். வாய்க்காலில் பிடிபட்ட இந்த அரிய வகை பாம்பை கடையனோடை மற்றும் சுற்று வட்டார கிராம பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு சென்றனர். பின்னர் அந்த பாம்பை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக ராஜபதி வன காப்பு பகுதியில் விட்டனர்.