

குத்தாலம்:
குத்தாலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் 85 வயதிலும் புத்தகங்களை சைக்கிளில் கொண்டு சென்று பள்ளி-நூலகங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.
102 நூல்கள் எழுதி உள்ளார்
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டை அடுத்த புத்தகரத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர், கலியசாமி(வயது85). தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., பி.எட். பட்டம் படித்த இவர், 1962-ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்துள்ளார். தமிழ் மொழி மீது கொண்ட பற்றுக்காரணமாக கலியசாமி என்ற தனது பெயரை கலைவேந்தர் என்று மாற்றிக்கொண்டார்.
இவர், 1953-ம் ஆண்டு பணக்காரன் என்ற தனது முதல் சிறுகதை தொகுப்பை வெளியிட்டார். அதன் பிறகு மனிதநேய தொடர்பு, மானம், பொதுவுடமை இவற்றை பிரதிபலிக்கும் வகையில் 102 தமிழ் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
இலவசமாக புத்தகங்கள்
கலைவேந்தர் 1995-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், எழுதுவதற்கு ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து புத்தகங்களை எழுதி வருகிறார். தற்போது குத்தாலம் பகுதியில் வசிக்கும் அவர், புத்தகங்களை சைக்கிளில் கொண்டு சென்று அருகில் உள்ள நூலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.
85 வயதிலும் புத்தகங்களை சைக்கிளில் கொண்டு சென்று நூலகம் மற்றும் பள்ளிகளுக்கு இலவசமாக வழங்குவதை அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
செல்போன் ஆதிக்கம்
இதுகுறித்து கலைவேந்தர் கூறியதாவது:- செல்போனின் ஆதிக்கம் நிறைந்த இந்த காலத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் மக்களிடையே வெகுவாக குறைந்து வருவது வருத்தம் அளிக்கிறது. தன்னை போன்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களிடையே ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.