அதிமுகவுடன் விரிசலா? பிரேமலதா விஜயகாந்த் பதில்

சட்டப்பேரவைத் தேர்தலின்போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
அதிமுகவுடன் விரிசலா? பிரேமலதா விஜயகாந்த் பதில்
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்தடைந்தார். அப்போது அவருக்கு தேமுதிக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மிக முக்கியமான மூன்று பிரச்சினை என்றால் மும்மொழி கொள்கை, தொகுதி சீரமைப்பு, மீனவர்கள் பிரச்சினை. இந்த காலகட்டத்தில் இது மூன்று தான் முக்கிய பிரச்சினையாக உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் தமிழ் மொழிதான் நம் தாய்மொழி, உயிர்மொழி. நமது தாய்மொழி தமிழக முழுவதும் கட்டாயமாக்கப்பட வேண்டும். அன்னை மொழி காப்போம் அனைத்து மொழியும் கற்போம் என்பதுதான் விஜயகாந்தின் வார்த்தை அதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதியில் குறைப்பதாக கருத்து இருக்கிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. அதனால் அதைப்பற்றி நான் பேசுவதற்கு எதுவும் இல்லை. தொடர்ந்து மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர் நிகழ்வாக உள்ளது. மிகவும் மன வேதனையாக இதை பதிவு செய்கிறேன். கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். நாம் அதனை விட்டுக் கொடுத்ததில் இருந்துதான் மீனவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. மீனவர்களுக்கு எல்லா வகையிலும் பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது.

பொறுத்திருங்கள் நிச்சயமாக அந்த காலம் வரும்போது நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றார். அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசல் உள்ளதா என்ற கேள்விக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை என அவர் பதிலளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com