குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

குட்டையில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
Published on

ஆவடியை அடுத்த திருநின்றவூர் தேரடி தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருடைய மகன் தீபக் (வயது 13). இவர், திருநின்றவூர் கோமதிபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் தீபக், பள்ளியில் தன்னுடன் படிக்கும் நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து திருநின்றவூர் அடுத்த ராஜாங்குப்பம் பகுதியில் உள்ள செங்கல் சூளை அருகே ஒரு குட்டையில் குளிப்பதற்காக சென்றனர்.

பின்னர் 4 பேரும் குட்டையில் குளித்துக்கொண்டு இருந்தனர். தீபக் அங்கிருந்த மேடான பகுதியில் இருந்து தண்ணீரில் குதித்ததாக கூறப்படுகிறது. தண்ணீரில் குதித்த தீபக் நீண்ட நேரமாக வெளியே வராததால் அவருடன் குளிக்க சென்ற நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

அப்போது செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டு இருந்த பொதுமக்கள் ஓடி வந்து குட்டையில் இறங்கி சேற்றில் சிக்கிய மாணவனை மீட்டனர். சுமார் 5 அடி ஆழமுள்ள அந்த குட்டையில் அதிகமான களிமண் சேரும் சகதியுமாக இருந்ததால் தண்ணீரில் குதித்த வேகத்தில் மாணவர் தீபக் சேற்றில் சிக்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com