பெரம்பலூருக்கு தனி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும்

பெரம்பலூருக்கு தனி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
பெரம்பலூருக்கு தனி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும்
Published on

பேரூராட்சி-நகராட்சியில் ஆய்வு

தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் பேரூராட்சி அலுவலகத்திலும், பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெரம்பலூரில் கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, கூறியதாவது:-

பெரம்பலூர் நகராட்சிக்கு ஆணையர் நியமிக்கப்படுவார். நகராட்சியில் குப்பை அள்ளுவதற்கு புதிய வாகனங்கள் வாங்கி கொடுக்கப்படும். நகராட்சி காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படும். பெரம்பலூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள அண்ணா நகரில் பாலம் கட்ட அனுமதி வாங்கி தரப்படும்.

குடிநீர் குழாய் சேதம்

குடிநீரை பொறுத்தவரை காவிரியிலும், கொள்ளிடத்திலும் 248 இடங்களில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 78 இடங்களில் வெள்ளத்தினால் குழாய்கள் உடைந்து சேதமாகிவிட்டது. பெரம்பலூருக்கு வரவேண்டிய குழாயும் அதில் ஒன்று. தற்போது ஒவ்வொன்றாக சரி செய்து கொண்டு வருகிறோம்.

பெரம்பலூர் நகராட்சி முதல் நிலை தேர்வு நகராட்சியாக மாற்றப்படும். மக்கள் தொகைக்கு ஏற்ப கூட்டுக்குடிநீர் திட்டத்தை அதிகப்படுத்துவதற்கான முயற்சி செய்து வருகிறோம். ஒரு திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால், அதற்கு திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும்.

தனி கூட்டுக்குடிநீர் திட்டம்

அனைத்து இடங்களிலும் தண்ணீர் எடுப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அங்கு எல்லாம் பெரிய பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே பெரம்பலூர் நகராட்சிக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய முதல்-அமைச்சரின் அனுமதியை பெற்று தனி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும். அப்போது பெரம்பலூரில் உள்ள அனைத்து இடங்களுக்கும் தண்ணீர் வருவதுபோன்று செய்து விடுவோம். பெரம்பலூர் நகராட்சியில் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளையும் உறுதியாக செய்து கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, பிரபாகரன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகரன் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com