'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை எதிர்த்து தமிழக சட்டசபையில் இன்று தனித்தீர்மானம்

தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை எதிர்த்து தமிழக சட்டசபையில் இன்று தனித்தீர்மானம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், கவர்னர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. .

உரையை வாசிக்க ஆரம்பித்த கவர்னர் ஆர்.என். ரவி, சட்டசபை துவங்கும் முன்பாகவும் முடியும்போதும் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்ற தனது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, தேசிய கீதத்திற்கு போதிய மரியாதை தரப்படவில்லையென்று குறிப்பிட்டார். மேலும், கவர்னர் உரையில் தகவல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் தன்னால் ஏற்க முடியாத பகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன என்றும் அவற்றை வாசிப்பது அரசியல் சாசனத்தை அவமதிப்பதாக அமையும் என்றும் கூறிவிட்டு, உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி அமர்ந்தார். இதையடுத்து, கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அந்த உரையை வாசித்து முடித்த பிறகு பேசிய சபாநாயகர் அப்பாவு, சில கருத்துகளை முன்வைத்தார். சபாநாயகர் அப்பாவு அதனை சொல்லி முடித்ததும், கவர்னர் ஆர்.என். ரவி அவையிலிருந்து வெளியேறினார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபையை புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

.இந்த சூழலில் தமிழ்நாடு சட்டசபையின் 2-வது நாள் அமர்வு நேற்று தொடங்கியது. அதில் முதலாவதாக தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு தமிழ்நாடு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகளும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் வெங்கிடரமணன், கண் டாக்டர் பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி, தமிழக முன்னாள் தலைமைச் செயலாளரும் ஒடிசாவின் முன்னாள் கவர்னருமான ராஜேந்திரன் ஆகியோரின் மறைவு குறித்த இரங்கல் தீர்மானமும் வாசிக்கப்பட்டது.

தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு எம்.எல்.ஏ.க்கள் விவாதம் தொடங்கி நடைபெற்றது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.

இதனைத்தொடர்ந்து இன்று தமிழக சட்டசபையில் 'ஒரே நாடு ஒரு தேர்தல்' திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி தனித் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.இந்தத் தனித்தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் முன்மொழிகிறார்.

தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடைபெற உள்ளது.   

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com