

வேடசந்தூர் மார்க்கெட் ரோட்டில் அரசு கச்சேரி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் பள்ளி வளாகத்தில் வகுப்பறைகள் அருகே கட்டுமான பொருட்களை குவித்து வைத்து இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று கட்டிட வேலைக்கு தொழிலாளர்கள் வந்தனர். அப்போது கட்டிட பொருட்களுக்குள் பாம்பு ஒன்று புகுந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பள்ளி மாணவ, மாணவிகள் யாரும் அந்த பகுதியில் வராதபடி ஆசிரியர்கள் பார்த்து கொண்டனர். இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சுமார் ஒரு மணி நேரம் போராடி 3 அடி நீளம் உள்ள நாகப்பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை வனப்பகுதிக்குள் விடுவதற்கு தீயணைப்பு படையினர் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.