தூத்துக்குடி அருகே நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரெயிலில் திடீர் தீ

உடனடியாக சிவப்பு நிற சிக்னல் கொடுக்கப்பட்டதை அடுத்து, ரெயில் என்ஜின் டிரைவர் வாஞ்சி மணியாச்சிக்கு முன்பாகவே நடுவழியில் ரெயிலை நிறுத்தினார்.
தீ விபத்து
கோப்புப்படம்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து மீளவிட்டான் வழியாக நேற்று அதி காலை 3.20 மணியளவில், அரியானா மாநிலம் பானிபட் பகுதிக்கு 25 பெட்டிகளுடன் நிலக்கரி ஏற்றி சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.

கரும்புகை

அந்த ரெயில் தட்டப்பாறை ரெயில் நிலையத்தை கடந்தபோது, அதன் என்ஜினுக்கு அடுத்த பெட்டியில் திடீரென கரும்புகை கிளம்பியது. இதனை கவனித்த தட்டப்பாறை ரெயில் நிலைய அதிகாரி, கைலாசபுரம் மற்றும் வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையங்களுக்கு அவசரமாக தகவல் கொடுத்தார். உடனடியாக சிவப்பு நிற சிக்னல் கொடுக்கப்பட்டதை அடுத்து, ரெயில் என்ஜின் டிரைவர் வாஞ்சி மணியாச்சிக்கு முன்பாகவே நடுவழியில் ரெயிலை நிறுத்தினார்.

தீயணைப்பு வீரர்கள்

அதற்குள் நிலக்கரி தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே மின் பொறியாளர்கள் உயர் அழுத்த மின்சாரத்தை துண்டித்தனர். ஓட்டப்பிடாரத்தில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மின் இணைப்பு சீரமைக்கப்பட்ட பின், அதிகாலை 5 மணியளவில் சரக்கு ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இந்த தீ விபத்து குறித்து வாஞ்சி மணியாச்சி ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com