சேலம் மருத்துவ மாணவி கொலை வழக்கில் திடீர் திருப்பம்: வயதுக்கு மீறிய நபருடன் காதல்..தந்தை எடுத்த விபரீத முடிவு


சேலம் மருத்துவ மாணவி கொலை வழக்கில் திடீர் திருப்பம்: வயதுக்கு மீறிய நபருடன் காதல்..தந்தை எடுத்த விபரீத முடிவு
x
தினத்தந்தி 9 Jan 2026 7:53 PM IST (Updated: 9 Jan 2026 7:54 PM IST)
t-max-icont-min-icon

ஒரே மகள் இப்படி தங்களை தேடாமல் வயதுக்கு மீறிய நபருடன் சுற்றித்திரிகிறாளே என்று வேதனை அடைந்துள்ளனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பாரதி நகரை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 52). இவருடைய மனைவி உஷா (43). இவர்களது மகள் வர்ஷினி (22). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் சித்த மருத்துவ கல்லூரியில் ஹோமியோபதி இறுதி ஆண்டு படித்து வந்தார்.

வாடகைக்கு வீடு எடுத்து தோழியுடன் தங்கி படித்து வந்தார். நேற்று முன்தினம் வர்ஷினி, அவர் தங்கி இருந்த வாடகை வீட்டில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த இரும்பாலை போலீசார் வர்ஷினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வர்ஷினி தற்கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு இருந்தது. அதேநேரத்தில் அவர் தங்கி இருந்த அறையின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.

எனவே அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அதாவது, வர்ஷினியிடம் தங்கி இருந்த அவருடைய தோழியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது வர்ஷினியை அவருடைய தந்தை வரதராஜன் வந்து சந்தித்து விட்டு சென்றதாக கூறப்பட்டது. வரதராஜனை போலீசார் தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதற்கிடையே வர்ஷினி உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது கழுத்து நெரிக்கப்பட்டு இருந்ததும், உடலில் நகக்கீறல்கள் இருந்ததும் தெரிய வந்தது. அப்போதுதான் வர்ஷினி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், வர்ஷினியின் தந்தையே அவரை கொலை செய்த தகவல் வெளியாகி போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தது.

இந்தநிலையில் வர்ஷினியின் தாய் உறவினர்களுடன் சேலம் வந்தார். மகளின் உடலை பார்த்து கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

அதன் விவரம் வருமாறு:-

வர்ஷினியின் தாய் உஷா, வரதராஜனை 2-வதாக திருமணம் செய்து கொண்டவர். வர்ஷினி சிறு வயதாக இருக்கும் போதே அவருடைய தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார். இதனால் அவருடைய தாய் உஷா, நெசவு தொழிலாளியான வரதராஜனை திருமணம் செய்து கொண்டார். வரதராஜனும் வர்ஷினிக்காக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் அவரையே தன்னுடைய உலகமாக நினைத்து உஷாவுடன் வாழ்ந்து வந்தார்.

தான் கஷ்டப்பட்டு வந்தாலும், மகளை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று வரதராஜனும், உஷாவும் மகளை சித்த மருத்துவ கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தனர். ஆனால் வர்ஷினியோ, திருமணமாகி 2 குழந்தைக்கு தந்தையான நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த டேக்வாண்டோ பயிற்சியாளர் ஒருவருடன் காதல்வயப்பட்டு இருந்தார். அந்த நபரும், தனது மகள் வயது உள்ள பெண் என்றுகூட பாராமல் வர்ஷினியுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.

இதனை அறிந்து அதிர்ந்து போன உஷாவும், வரதராஜனும் மகளுக்கு எவ்வளவோ புத்திமதி சொல்லி பார்த்துள்ளனர். ஆனாலும் டேக்வாண்டோ பயிற்சியாளருடனான தொடர்பை வர்ஷினி விடவில்லையாம்.

கடந்த கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையில் கூட வர்ஷினி சேலத்தில் இருக்காமல் ஊருக்கு வந்துள்ளார். அங்கு தனது காதலனுடன் சுற்றித்திரிந்து விட்டு மீண்டும் சேலத்துக்கு வந்துள்ளார். இதே போல சக்திவேலும் சேலத்திற்கு வந்து மாணவியுடன் வெளியில் சுற்றியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாணவியும், அந்த வாலிபரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான போட்டோவை உறவினர் ஒருவர் பெற்றோருக்கு அனுப்பி உள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது 40 தேக்வாண்டோ வயதான மாஸ்டருக்கு ஏற்கனவே திருணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் இந்த திருமணம் செல்லாது என்று மாணவிக்கு பெற்றோர் அறிவுரை கூறினர். ஆனால் வர்ஷினி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

உஷாவும், வரதராஜனும் ஒரே மகள் இப்படி தங்களை தேடாமல் வயதுக்கு மீறிய நபருடன் சுற்றித்திரிகிறாளே என்று வேதனை அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி சேலத்திற்கு வந்த வரதராஜன் மகளை நெல்லைக்கு அழைத்து சென்றார் நெல்லைக்கு சென்றதும் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மாணவி மீண்டும் பள் ஏறி சேலத்திற்கு வந்து விட்டார் அப்போதும் மனது கேட்கா வரதராஜன் அன்று மாலையே சேலம் வந்து வரிஷினிக்கு அறிவுரை கூறினார். ஆனா அப்போதும் மாணவி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. வர்ஷினி மறுப்பு தெரிவிக்கவே அவர் மகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இரும்பாலை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். தந்தையே வளர்ப்பு மகளை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story