சாலையில் கிடந்த 12 பவுன் நகைகளை போலீசில் ஒப்படைத்த டாஸ்மாக் ஊழியர்

வத்தலக்குண்டுவில், சாலையில் கிடந்த 12 பவுன் நகைகளை டாஸ்மாக் ஊழியர் போலீசில் ஒப்படைத்தார்.
சாலையில் கிடந்த 12 பவுன் நகைகளை போலீசில் ஒப்படைத்த டாஸ்மாக் ஊழியர்
Published on

12 பவுன் நகைகள்

திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 48). டாஸ்மாக் கடை விற்பனையாளர். இவர், வத்தலக்குண்டு தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வத்தலக்குண்டுவில் பணிமுடித்து விட்டு பழைய வத்தலக்குண்டுவுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று காண்டிருந்தார்.

அப்போது பழைய வத்தலக்குண்டு சாலையில் கலைஞர் காலனி அருகே பை ஒன்று கிடந்தது. உடனே அதை எடுத்து பார்த்தபோது நகை பெட்டியில் புதிதாக வாங்கிய 12 பவுன் நகைகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள நகை கடை ரசீது இருந்தது.

அந்த நகைகளை வத்தலக்குண்டு போலீஸ்நிலையத்தில் கார்த்திக் ஒப்படைத்தார். அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.

போலீஸ் விசாரணை

பின்னர் நகை கடை ரசீதை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த நகைகளை கட்டக்காமன்பட்டியை சேர்ந்த கவுதம் என்பவர் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து கவுதமை அழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் கூறுகையில், நேற்று முன்தினம் தனது உறவினர் சுமதி என்பவருடன் சென்று, அவருக்கு பழக்கமான சோழவந்தானில் உள்ள நகை கடையில் நகைகளை வாங்கினேன். அதன்பின்னர் திண்டுக்கல்லுக்கு ஒரு வாடகை காரில் சென்று சுமதியை சென்னைக்கு ரெயிலில் ஏற்றி விட்டேன். பின்னர் பழைய வத்தலக்குண்டுவுக்கு வந்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் நகை பையை வைத்துக்கொண்டு கட்டக்காமன்பட்டிக்கு வந்தேன். அங்கு மாட்டார் சைக்கிளில் இருந்த நகைகள் வைத்திருந்த பை காணாமல்போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். வேகத்தடையை கடந்து செல்லும்போது மோட்டார் சைக்கிளில் இருந்து நகை பை தவறி விழுந்தது தெரியவந்தது.

இதற்கிடையே நகைகளை மீட்டு வைத்து இருப்பதாக போலீசார் செல்போன் மூலம் எனக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலீஸ்நிலையத்துக்கு வந்தேன், என்றார். இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கவுதமிடம் நகைகளை திரும்ப ஒப்படைத்தார். அந்த நகைகளை பாலீஸ்நிலையத்தில் ஒப்படைத்த கார்த்திக்கை பாலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com