தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 9 பேர் கொண்ட குழு திடீர் ஆய்வு !

ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணி தொடர்பாக மேலாண்மை குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 9 பேர் கொண்ட குழு திடீர் ஆய்வு !
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். கடந்த மே 22 ஆம் தேதி 2018 ஆண்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது.

கடந்த 5 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வேதாந்தா நிறுவனம், ஆலை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஸ்டெரிலைட் ஆலையில் மீதமுள்ள ஜிப்ஸம் கழிவுகளை அகற்றுதல், ஆலையின் அபாயகரமான கழிவுகளை அகற்றுவது, ஆலையின் பசுமை வளையத்தை பராமரிப்பது, புதர்களை அகற்றி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது உள்ளிட்டு 4 விதமான பணிகளுக்கு மட்டும் அனுமதி அளித்தது.

இதனை தொடர்ந்து தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தூத்துக்குடி உதவி ஆட்சியர் தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், மாவட்டத் தொழிற்சாலைகள் ஆய்வாளர், தீயணைப்புத்துறை அலுவலர், ஸ்டெர்லைட் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உள்ளிட்ட 9 பேர் கொண்ட மேலாண்மை குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில் ஆலையின் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக 9 பேர் கொண்ட குழுவினர் இன்று ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆலையில் ஜிப்ஸம் கழிவுகளை அகற்றும் பணிகள் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையொட்டி ஸ்டெர்லைட் ஆலையின் முன்பு சிப்காட் காவல் ஆய்வாளர் ஷண்முகம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆய்வுக்குப்பின் குழுவினர் விரிவான அறிக்கையை இன்று மாலை மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆலைக் கழிவுகளை வெளியேற்றுவதற்கான பணிகள் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில் இந்த ஆய்வு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com