

எம்.பி.ஏ. பட்டதாரி
சென்னை தாம்பரம் அருகே உள்ள மண்ணிவாக்கம் புதுநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் அசோக் (வயது 33). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், வேலை தேடி வந்தார். ஆனால் படிப்புக்கு ஏற்ற சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் அவருக்கும், உறவினர் பெண்ணுக்கும் திருமணம் செய்வது தடைபட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அசோக், மோட்டார் சைக்கிளில் சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலையம் சென்றார்.
ரெயில் முன் பாய்ந்தார்
பின்னர் ரெயில் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தாம்பரம் ரெயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல ஊரப்பாக்கம்-கூடுவாஞ்சேரி ரெயில் நிலையங்கள் இடையே 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது ரெயிலில் அடிபட்டு இறந்தார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என தாம்பரம் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.