திருமங்கலத்தில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்த வாலிபர்

குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்ய முயன்ற போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலத்தில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்த வாலிபர்
Published on

சென்னை புரசைவாக்கம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் தங்கராஜ் (வயது 53). இவர், திருமங்கலம் போக்குவரத்து போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 100 அடி சாலை, திருமங்கலம் 2-வது அவென்யு சந்திப்பில் பணியில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதை கண்ட தங்கராஜ், அவரை தூக்கி விட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மது அருந்தி இருந்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய முயன்றார்.

இதனால் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜூடன் வாக்குவாதம் செய்த அவர், பின்னர் அங்கிருந்து சென்று விட்டார். 10 நிமிடம் கழித்து மீண்டும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த அதே நபர், திடீரென போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜின் கன்னத்தில் 'பளார்' என அறைந்து விட்டு தப்பிச்சென்றார்.

இது குறித்து தங்கராஜ் திருமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சப்-இன்ஸ்பெக்டர் கன்னத்தில் அறைந்தது அரும்பாக்கம், அம்பேத்கர் நகரை சேர்ந்த லோகேஷ்வர்மன் (29) என்பதும், கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருவதும் தெரிந்தது. மதுரவாயல் ரயில் நகர் பகுதியில் பதுங்கி இருந்த லோகேஷ்வர்மனை திருமங்கலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com