செல்போனில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்த வாலிபர்

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் செல்போனில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து ரசித்த வாலிபரை, அவரது காதல் மனைவியே போலீசில் பிடித்து கொடுத்தார்.
செல்போனில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்த வாலிபர்
Published on

திருவொற்றியூர்,

சென்னை புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட் பார்ம் தெருவில் வசித்து வருபவர் சேகர் (வயது 30). இவர், தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சேகர், தான் குடியிருக்கும் அதே குடியிருப்பில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் குளிக்கும்போது தனது செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்தார்.

இதனை அந்த பெண், சேகரின் மனைவியிடம் கூறி எச்சரித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சேகரின் மனைவி, தனது கணவரின் செல்போனை அவருக்கே தெரியாமல் எடுத்து ஆய்வு செய்தார்.

அதில் தனது தங்கை உடைமாற்றும் வீடியோ மட்டுமல்லாது, அக்கம் பக்கத்தில் வசிக்கும் பெண்களின் சில முகம் சுளிக்க வைக்கும் ஆபாச வீடியோக்களும் இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

கணவர் கைது

உடனடியாக சேகரின் மனைவி, இதுபற்றி திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். கணவரின் செல்போனையும் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அந்த செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் பல பெண்கள் குளிப்பது மட்டுமின்றி, தங்கள் வீட்டு முன் கோலம் போடுவது உள்ளிட்ட ஆபாச வீடியோக்கள் பதிவு செய்து இருப்பது தெரிந்தது.

சேகர், அந்த ஆபாச வீடியோக்களை தனது வீட்டில் யாருக்கும் தெரியாமல் பார்த்து ரசித்து வந்துள்ளார். சேகரின் மனைவி அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

காதல் திருமணம்

சேகரும், அவருடைய மனைவியும் 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இந்தநிலையில் சேகர், இதுபோன்ற வக்கிர எண்ணத்துடன் செயல்பட்டது அப்பகுதியில் உள்ள பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அக்கம் பக்கத்து பெண்களை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்த தனது காதல் கணவனை தைரியமாக போலீசில் பிடித்து கொடுத்த மனைவியை, போலீஸ் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com