கேளம்பாக்கத்தில் துணி கடையில் பயங்கர தீ விபத்து

கேளம்பாக்கத்தில் துணி கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
கேளம்பாக்கத்தில் துணி கடையில் பயங்கர தீ விபத்து
Published on

தீ விபத்து

சென்னை தியாகராயநகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜாகிர் உசேன் (வயது 46) மற்றும் அப்துல்லா. இவர்கள் இருவரும் கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் துணிக்கடை நடத்தி வருகின்றனர். துணிக்கடையில் தரைதளம், முதல் தளம், 2-வது தளம் என்று செயல்பட்டு வந்தது. நேற்று காலை 5 மணியளவில் கடையில் இருந்து லேசான புகை வருவதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், கேளம்பாக்கம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். கடையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடை உரிமையாளர் வரும்போது சாவியை எடுத்து வராததால் கடையை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது, இதனால் தீ முதல் தளம் முழுவதும் பரவியது.

5 மணி நேரம் போராடி...

காலவாக்கம், சிறுசேரி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தரைதளத்தில் உள்ள தீயை கட்டுப்படுத்த முயன்றனர். தீ தரைத்தளம், முதல் தளம், 2-வது தளம் போன்றவற்றுக்கும் பரவியது. இதையடுத்து கூடுதலாக பாலவாக்கம், துரைப்பாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட 5 இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பொக்லைன் எந்திரம் மூலம் கடையின் ஷர்ட்டர் உடைக்கப்பட்டு தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து நடைபெற்று இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

போக்குவரத்து பாதிப்பு

தீ விபத்து குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தீ விபத்து காரணமாக சென்னையில் இருந்து திருப்போரூர் நோக்கி வந்த பஸ்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்களை குறுகிய பாதையான வீராணம் சாலை வழியாக மாற்று பாதையில் திருப்பி விட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com