

சென்னை,
சென்னை அமைந்தகரை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று இரவு 9.30 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அண்ணாநகர் மற்றும் கீழ்ப்பாக்கத்தில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
பிரதான சாலையில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.