மீஞ்சூர் பகுதியில் போலீஸ் அதிரடி வேட்டை: குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 94 பேர் சிக்கினர் 11 பேர் கைது

மீஞ்சூர் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 94 பேர் சிக்கினர்.
மீஞ்சூர் பகுதியில் போலீஸ் அதிரடி வேட்டை: குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 94 பேர் சிக்கினர் 11 பேர் கைது
Published on

மீஞ்சூர்,

மீஞ்சூர் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 94 பேர் சிக்கினர். அதில் கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட சதிதிட்டம் தீட்டிய 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

சிறப்பு அதிரடிப்படை அமைப்பு

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதிகளில் அடிக்கடி கொலை, கொள்ளை, வழிப்பறி, மாமூல் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்கள் நடைபெற்று வருவதாகவும், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் அந்த பகுதி பொதுமக்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தியிடம் புகார்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து மீஞ்சூர் பகுதியில் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தில்லைநடராஜன், பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா உள்பட 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 8 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 230 போலீசார் கொண்ட சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது.

அதிரடி வேட்டை

இந்த சிறப்பு அதிரடிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு மீஞ்சூர், நாலூர், வன்னிப்பாக்கம், அனுப்பம்பட்டு, வல்லூர், மேலூர், நந்தியம்பாக்கம், அத்திப்பட்டு, கொரஞ்சூர்ரெட்டிபாளையம், வெங்கட்ரெட்டிபாளையம் உள்பட பல்வேறு இடங்களில் குற்ற செயல்களில் தொடர்புடையவர்களை வீடு, வீடாகச் சென்று அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 94 பேரை மடக்கி பிடித்து, மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

11 பேர் கைது

அதில், 94 பேரில் 11 பேர் மட்டும் கூட்டுக்கொள்ளை, வழிப்பறி செய்ய சதி திட்டம் தீட்டியவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கூட்டுக்கொள்ளையில் ஈடுபட சதிதிட்டம் தீட்டியதாக வன்னிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அருண்(26), அசோக்குமார்(20), அத்திப்பட்டு புதுநகரைச் சேர்ந்த மணிகண்டன்(20), அனுப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ்(20), பிரகாஷ்(20), கொரஞ்சூர்ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த அஜித்குமார்(20), நந்தியம்பாக்கத்தைச் சேர்ந்த செல்லா(25), சூர்யா(31) ஆகிய 8 பேர் மற்றும் வழிப்பறியில் ஈடுபட முயன்ற மீஞ்சூரைச் சேர்ந்த தனுஷ்(20), வெங்கட்ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த சோபன்பாபு(20), நந்தியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக்(20) ஆகிய 3 பேர் என 11 பேரை மீஞ்சூர் போலீசார் கைது செய்து, அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

எச்சரித்து விடுவிப்பு

பின்னர் கைதான 11 பேரையும் பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நிதிபதி உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர்.

மீதம் உள்ள 83 பேர்கள் மீது போலீசில் பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தாலும், இனிமேல் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று அவர்கள் உறுதி மொழி அளித்தனர். அதை ஏற்று அவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

மீஞ்சூர் பகுதியில் இதுபோல் பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபடுவோரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதேபோன்ற அதிரடி நடவடிக்கைகள் மீண்டும் தொடரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் மீஞ்சூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com