பள்ளி தோழனை நம்பியதால் நடந்த விபரீதம்.. காரில் அழைத்து சென்று பெண் பலாத்காரம்

பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணை காரில் அழைத்து சென்று பள்ளி தோழன் பலாத்காரம் செய்தார்.
பள்ளி தோழனை நம்பியதால் நடந்த விபரீதம்.. காரில் அழைத்து சென்று பெண் பலாத்காரம்
Published on

குழித்துறை,

குமரி மாவட்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 35 வயதுடைய ஒரு பெண்ணுக்கு கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். அந்த பெண் ஒரு துணிகடையில் வேலை செய்து வருகிறார். இந்த பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஒரு வாலிபரும் பள்ளிக்கூடத்தில் ஒன்றாக படித்துள்ளனர். இதனால் பார்க்கும் போதெல்லாம் அந்த பெண்ணிடம் வாலிபர் நன்றாக பேசுவார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண் தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு பஸ்சில் சென்று விட்டு மீண்டும் இரவு 9 மணியளவில் குழித்துறை சந்திப்பில் பஸ்சில் வந்து இறங்கினார். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக பஸ்சுக்காக குழித்துறை பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார்.

அப்போது அந்த வாலிபர் காரில் அங்கு வந்தார். அவர் அந்த பெண்ணிடம், காரில் வீட்டில் கொண்டு விடுவதாக கூறினார். அந்த பெண்ணும் தன்னுடன் படித்தவர் என்ற முறையில் அவரது அழைப்பை ஏற்று காரில் ஏறி பின் இருக்கையில் அமர்ந்து கொண்டார். இதையடுத்து காரை வாலிபர் ஓட்டி சென்றார்.

சிறிது தூரம் சென்றதும் அந்த வாலிபர் காரை திடீரென தனது வீட்டிற்கு செல்லும் பாதையை நோக்கி திருப்பினார். அதுபற்றி அந்த பெண் கேட்டபோது, 'நீ எனது வீட்டிற்கு வந்து எனது மனைவியையும், குழந்தைகளையும் பார்த்துவிட்டு போ' என்று கூறியுள்ளார்.

நண்பர் என்ற முறையில் அந்த பெண் சந்தேகப்படவில்லை. பின்னர் அவர் காரை தனது வீட்டில் நிறுத்திவிட்டு அந்த பெண்ணை வீட்டுக்குள் அழைத்துள்ளார். அவரது பேச்சை நம்பிய அந்த பெண் காரில் இருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றார். அப்போது வீட்டில் வேறு யாரும் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த வாலிபர் திடீரென வீட்டின் கதவை மூடினார். இதனால் அச்சமடைந்த அந்த பெண் சத்தம் போட்டார். உடனே வாலிபர், பெண்ணின் வாயைப் பொத்தி அவரை அறைக்குள் இழுத்து சென்று வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார்.

பின்னர் அந்த வாலிபர், 'இந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் உன்னையும் உன் குழந்தைகளையும் கொன்று விடுவேன். உன் கணவரை கார் ஏற்றி கொன்று விடுவேன்' என்று மிரட்டி உள்ளார். அத்துடன் அந்த பெண்ணை காரில் ஏற்றி அவரது வீட்டிற்கு போகும் வழியில் இறக்கி விட்டார்.

அந்த பெண் தனது வீட்டிற்கு சென்ற பின்பு இந்த சம்பவம் பிறருக்கு தெரிந்தால் அவமானம் ஏற்படும் என்பதால் யாரிடமும் கூறவில்லை. மேலும் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். இதை கவனித்த கணவர் அவரிடம், ' சில நாட்களாக ஏன் இப்படி ஒரு மாதிரியாக இருக்கிறாய்' என்று ஆறுதலாக கேட்டார். உடனே அந்த பெண் நடந்த சம்பவத்தை கணவரிடம் சொல்லி அழுதார்.

இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த கணவர், அந்த வாலிபரின் வீட்டிற்கு சென்று அவருடைய மனைவியிடமும், அம்மாவிடமும் நடந்த சம்பவத்தை சொல்லுமாறு பெண்ணை அனுப்பி வைத்தார். அதை தொடர்ந்து அந்த பெண் வாலிபரின் வீட்டிற்கு சென்றார். அங்கே வாலிபரும், அவரது மனைவியும், தாயும், அக்காவும் இருந்தனர்.

அப்போது அந்த பெண், வாலிபரின் குடும்பத்தினரிடம் நடந்த சம்பவத்தை எடுத்து சொல்லி அவரை கண்டிக்குமாறு கூறினார். உடனே வாலிபரின் அக்கா அந்த பெண்ணிடம் தகராறு செய்து செருப்பு, கம்பால் சரமாரியாக தாக்கினார். மேலும் அந்த வாலிபர் ஆபாசமாக பேசியதுடன் 'நீ பொய் சொல்கிறாய்' என கையால் தாக்கி, காலால் வாயில் மிதித்தார். இதில் காயமடைந்த பெண் அங்கிருந்து தப்பி வந்தார்.

இதுகுறித்து அந்த பெண் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com