

சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
சென்னை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியவுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோர்களுக்கு வாக்கு எண்ணும் செயல்முறை குறித்த பயிற்சி வகுப்பு கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/இணை ஆணையாளர் (கல்வி) க. கற்பகம், தலைமையில் இன்று (30.04.2026) வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் 23.04.2026 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களான சென்னை ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதனையொட்டி, 04.05.2026 அன்று வாக்கு எண்ணிக்கை பணி நடைபெறுவதை முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்கு எண்ணிக்கை எவ்வாறு மேற்கொள்வது, அவர்களின் பணிகள் தொடர்பான செயல்முறை பயிற்சி வகுப்பு இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.
மேலும், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் தபால் வாக்குகள் தனியாக தலா 4 மேசைகளிலும், Service Voters (ETPBS) வாக்குகள் தனி மேசைகளிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தலா 14 மேசைகளிலும் எண்ணப்படும்.
இதில் ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு 18 சுற்றுகளிலும், திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு 17 சுற்றுகளிலும், ராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு 14 சுற்றுகளிலும், துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு 14 சுற்றுகளிலும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்கு 17 சுற்றுகளிலும் வாக்குகள் எண்ணப்படும்.
லயோலா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு 22 சுற்றுகளிலும், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு 21 சுற்றுகளிலும், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு 19 சுற்றுகளிலும், எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு 15 சுற்றுகளிலும், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்கு 18 சுற்றுகளிலும், அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதிக்கு 20 சுற்றுகளிலும் வாக்குகள் எண்ணப்படும்.
அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணிக்கை மையத்தில் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு 23 சுற்றுகளிலும், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு 21 சுற்றுகளிலும், தியாகராயநகர் சட்டமன்றத் தொகுதிக்கு 18 சுற்றுகளிலும், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு 20 சுற்றுகளிலும், வேளச்சேரி சட்டமன்றத் தொகுதிக்கு 23 சுற்றுகளிலும் வாக்குகள் எண்ணப்படும்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) நா. பூஷ்ணாதேவி, உதவி ஆணையாளர் (பொது நிர்வாகம்) உமா மகேஸ்வரி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.