கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை பாதுகாக்க மறுசீரமைப்பு திட்டம் வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க தமிழக அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ராமதாஸ்
Published on

சென்னை,

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகளும் லட்சக்கணக்கான கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் நேரடியாக தொடர்புடையவை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் போதிய முதலீடு இல்லாமை, பழைய எந்திரங்கள், காலிப்பணியிடங்கள், குறைந்த பிழித்திறன் மற்றும் நிர்வாக அலட்சியம் காரணமாக முழுத் திறனுடன் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இதன் நேரடி பாதிப்பை கரும்பு விவசாயிகளும், ஆலைத் தொழிலாளர்களும் சந்தித்து வருகின்றனர். கரும்புகளை உரிய நேரத்தில் ஆலைகள் வாங்காததால் விவசாயிகள் கடுமையான பொருளாதார இழப்பை சந்திக்கின்றனர். கரும்புக்கான நிலுவைத் தொகைகளும் பல இடங்களில் தாமதமாக வழங்கப்படுவதால் விவசாயிகளின் கடன் சுமை அதிகரித்து வருகிறது. எனவே தற்போதைய தமிழக அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை பாதுகாக்கவும், நவீனமயமாக்கவும் தனித்துவமான மறுசீரமைப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

தமிழக அரசு தமிழகத்தில் கரும்பு உற்பத்தியை மேம்படுத்த:

கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்யப்பட்ட அனைத்து கரும்புகளும் முழுமையாக குறிப்பிட்ட நேரத்தில் வாங்கப்பட வேண்டும். கரும்பு பிழித்திறனை அதிகரிக்க உலகத் தரம் வாய்ந்த நவீன எந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் நிறுவப்பட வேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு அறிவியல் அடிப்படையிலான சாகுபடி பயிற்சிகள், மேம்பட்ட விதை ரகங்கள் மற்றும் சொட்டு நீர்ப்பாசன வசதிகள் வழங்கப்பட வேண்டும்.

சர்க்கரை உற்பத்தியுடன் எத்தனால், உயிரி உரம் மற்றும் இணை மின் உற்பத்தி திட்டங்களை விரிவுபடுத்தி ஆலைகளின் வருவாயை அதிகரிக்கப்பட வேண்டும். அனைத்து கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிலும் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டங்கள் அமைக்கப்பட்டும் விரிவுபடுத்தியும் கூடுதல் வருவாய் ஈட்டப்பட வேண்டும். ஆலைகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் பயன் உள்ளூர் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். பல ஆண்டுகளாக விவசாய பங்குதாரர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள லாபப் பங்குகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

கூட்டுறவு ஆலைகளில் ஈட்டப்படும் லாபத்தில் உரிய பங்கை பங்குதார விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வெளிப்படையாக வழங்க வேண்டும். கரும்பு கொள்முதல் தொகைகள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் விவசாயிகளுக்கு கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் நிர்வாகத்தில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.

கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் வெறும் தொழிற்சாலைகள் அல்ல; அவை கிராமப்புற பொருளாதார வளர்ச்சியின் மையங்களாகும். இந்த ஆலைகளை நவீனமயமாக்குவதன் மூலம் கரும்பு விவசாயிகளின் வருமானம் உயர்வதோடு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் பாதுகாக்கப்படும். மேலும், தமிழ்நாட்டின் சர்க்கரை உற்பத்தித் திறன் தேசிய அளவில் முன்னுதாரணமாக மாறும். தமிழக அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மீட்டெடுத்து, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com