பெருத்த ஏமாற்றம் அளிக்கும் வெங்காய நிதி நிலை அறிக்கை - இந்திய கம்யூனிஸ்டு கட்சி

வழக்கம்போல் உயர் தட்டு நிதி மூலதன சக்திகளுக்கும், கார்ப்பரேட் குழும நிறுவனங்களுக்கும் சாதகமான நிதிநிலை அறிக்கை என இந்திய கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்து உள்ளது.
பெருத்த ஏமாற்றம் அளிக்கும் வெங்காய நிதி நிலை அறிக்கை - இந்திய கம்யூனிஸ்டு கட்சி
Published on

சென்னை,

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டு உள்ள அறிக்கையில், நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை கூடிய அவையில் முன் வைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை, காஞ்சிப்பட்டு உடுத்தி வந்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஒன்பதாவது முறையாக சமர்ப்பிக்கும் நிதிநிலை அறிக்கை என பல பெருமைகள் கொண்ட நிதி நிலை அறிக்கை நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. வருமான வரி விலக்கின் வரம்பை உயர்த்தியதும், அடுத்த நிலை வருமான பிரிவினருக்கு சில சலுகைகள் வழங்கியிருப்பதும் தவிர நிதி நிலை அறிக்கையில் ஏதுமில்லை. நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு 50 சதவீதம் வரிப்பகிர்வு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் நீக்கப்பட்டதால், நாடு முழுவதும் ஊரகப்பகுதி மக்களிடம் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை தணிக்க மகாத்மா காந்தி சுயராஜ்ய முன்னெடுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் டிரம்ப் நிர்வாகம் இந்தியாவின் மீது கூடுதல் வரிவிதிப்பு செய்ததன் காரணமாக பின்னலாடை ஏற்றுமதி 40 சதவீதம் தடைபட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கடனுக்கான வட்டி மானியம் 5 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும். கடன் வரம்பு 50 லட்சம் ரூபாய் என்பது நீக்கப்பட வேண்டும் என்ற ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பை நிதிநிலை அறிக்கை பிரதிபலிக்கவில்லை.

விவசாயிகளின் ஆண்டு வருமானம் இரட்டிப்பாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற, உருப்படியான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஓராண்டுக்கும் மேலாக நீடித்த ஐக்கிய விவசாயிகள் அமைப்பின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் அளித்த வாக்குறுதிப்படி, விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யும் சட்டபூர்வ நிர்வாக ஏற்பாடு உருவாக்குவதிலும் நிதிநிலை அறிக்கை கவனம் செலுத்தவில்லை.

நூறாண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை பறித்த மத்திய அரசுக்கு எதிராக 30 கோடி தொழிலாளர்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஊரகப்பகுதிகளில் வாழ்ந்து வரும் 26 கோடி விவசாய தொழிலாளர்கள், உடல் உழைப்பு தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை மேலும் வலுப்படுத்தி மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிதிநிலை அறிக்கை அலட்சியப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கான மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டம் ஏற்கப்படவில்லை.

கல்வி வளர்ச்சி குறித்து பேசும் நிதிநிலை அறிக்கை, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி வளர்ச்சி நிதியை வழங்க முன் வரவில்லை. தேங்காய் மற்றும் கோகோ உற்பத்தியை அதிகரிக்க பெரும்பாதை அமைக்கும் திட்டம், அரிய வகை கனிம வளம் நிறைந்த ஒடிசா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கனிம வழித்தடங்கள் அமைப்பது போன்ற திட்டங்கள் பன்னாட்டு கார்ப்பரேட் குழும நலனுக்கு உதவும் நோக்கம் கொண்டதாகும். மத்திய அரசு முன்வைக்கும் புள்ளி விவரங்கள் மீது, நம்பகத்தன்மை மீது சர்வதேச நிதி ஆணையம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், கடந்த ஆண்டு நிதி நிலை பற்றாக்குறை, நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 4.4 சதவீதமாக இருக்கும் என்று கணித்த நிலையில், திருத்திய மதிப்பீட்டில் 4.8 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

சமூக செல்வத்தை உற்பத்தி செய்யும் அடித்தட்டு உழைக்கும் மக்களின் நலன்களை புறக்கணித்து, வழக்கம்போல் உயர் தட்டு நிதி மூலதன சக்திகளுக்கும், கார்ப்பரேட் குழும நிறுவனங்களுக்கும் சாதகமான நிதிநிலை அறிக்கை. உழைக்கும் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பெருத்த ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை. காஞ்சிப்பட்டு உடுத்தி வந்த நிதி மந்திரி முன் வைத்த நிதிநிலை அறிக்கை உரித்து பார்த்தால் ஒன்றும் கிடைக்காது என்பதை உணர்த்தும் வெங்காய நிதி நிலை அறிக்கையாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com