

சென்னை,
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“அனைத்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரின் விருப்பப்படி மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியின் சார்பாக 2026 சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. 10 தொகுதிகளில் போட்டியிட்டு, 1 தொகுதியில் வெற்றி பெற்றது.
மக்கள் மனநிலையின் வெளிப்பாடு மட்டுமல்ல; இத்தேர்தல் கவர்ச்சிக்கும் மாயைக்கும் கிடைத்த வெற்றி. அதனால் நாம் யாரும் இதைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. நாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கி, கேப்டன் நமக்கு வகுத்துக் கொடுத்த பாதையிலே தொடர்ந்து உறுதியுடன் பயணிப்போம்.
மேலும், மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியைச் சேர்ந்த அனைவருக்கும், வாக்களித்து ஆதரவு அளித்த மக்களுக்கும் எங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். விருத்தாசலம் தொகுதியின் வெற்றியை கேப்டனுக்கும், விருத்தாசலம் தொகுதி மக்களுக்கும், தே.மு.தி.க.வுக்கும் சமர்ப்பிக்கிறேன். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.