கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி கைது

சுரண்டை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 3 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி கைது
Published on

தனியார் நிறுவன ஊழியர்கள்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வீரசிகாமணியை அடுத்த வென்றிலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாகண்ணு. இவருடைய மகன் வைரவசாமி (வயது 30). இவருடைய மனைவி முத்துமாரி (23). இவர்கள் 2 பேரும் வீரசிகாமணியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் ஒரே மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று விட்டு, இரவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

கணவர் அடித்துக்கொலை

வீரசிகாமணி அருகே நடுவக்குறிச்சி சமத்துவபுரத்தை கடந்து காட்டு பகுதியில் சென்றபோது, அந்த வழியாக காரில் வந்த மர்மநபர்கள் திடீரென்று மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கம்பு, கற்களால் வைரவசாமியை சரமாரியாக தாக்கி விட்டு, முத்துமாரி அணிந்திருந்த நகையை பறித்து சென்றனர். இதில் பலத்த காயமடைந்த வைரவசாமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களிடம், முத்துமாரி தனது கணவரை மர்மநபர்கள் அடித்துக்கொலை செய்து விட்டு தனது நகையை பறித்து சென்றதாக கூறி கதறி அழுதார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து சேர்ந்தமரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்த வைரவசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துமாரியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், அவரிடம் துருவித்துருவி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி...

இதில், முத்துமாரியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவரை திட்டமிட்டு தீர்த்துக்கட்டி விட்டு, நகைக்காக மர்மநபர்கள் கொலை செய்ததாக நாடகமாடியது அம்பலமானது. அதாவது, வைரவசாமியும், முத்துமாரியும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியதால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.

திருமணத்துக்கு முன்பு முத்துமாரி, வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், திருமணத்துக்கு பின்னரும் அந்த வாலிபருடன் முத்துமாரி பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.

மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த வைரவசாமி கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த முத்துமாரி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவரை தீர்த்துக்கட்டியதும், பின்னர் நகைக்காக கொலை நடந்தது போன்று நாடகமாடியதும் அம்பலமானது.

3 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

இதையடுத்து முத்துமாரியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவான முத்துமாரியின் கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 2 பேர் ஆகிய 3 பேர் கும்பலை கைது செய்ய போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com