

டி.என்.பாளையம்
கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த ஒரு ஆண்டாக அட்டகாசம் செய்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
காட்டு யானை அட்டகாசம்
ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் காணப்படுகின்றன. இதில் காட்டு யானை ஒன்று கடம்பூரை அடுத்த பூதிக்காடு, செங்காடு, மூலக்கடம்பூர், தொண்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் கடந்த ஒரு ஆண்டாக புகுந்து அங்கு பயிரிடப்பட்டு உள்ள சோளம், வாழை, கரும்பு போன்ற பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வந்தது.
இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை பிடித்து வேறு ஒரு வனப்பகுதியில் விட வனத்துறையினருக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து காட்டு யானையை பிடிக்க உயர் அதிகாரிகளின் அனுமதியை வனத்துறையினர் பெற்றனர்.
மருத்துவ குழு
இதைத்தொடர்ந்து காட்டு யானையை பிடிக்க மருத்துவ குழு கடம்பூர் மலைப்பகுதிக்கு வந்தது. மேலும் யானை பிடிபட்டால் வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இருந்து தனி வாகனமும் கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கடம்பூர் வனச்சரகர் ரவிச்சந்திரன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது சமவெளி பகுதிக்கு காட்டு யானை வந்தால்தான், அதை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியும் என மருத்துவக்குழு சார்பில் வனத்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டது.
மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஓசப்பாளையம் அடுத்த பெலுமுகை பகுதியில் விவசாய நிலத்துக்கு காட்டு யானை வந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மருத்துவக்குழுவினர் மற்றும் வனத்துறையினர் பெலுமுகை பகுதிக்கு விரைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து காட்டு யானைக்கு சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை கால்நடை டாக்டர் சதாசிவம் 2 டோஸ் மயக்க ஊசியை துப்பாக்கி மூலம் செலுத்தினார். இதில் அந்த காட்டு யானை சிறிது நேரத்தில் மயங்கியபடி நின்றது.
உடனே வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு காட்டு யானையின் கால்களை கட்டி பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் வாகனத்தில் ஏற்றினர். பின்னர் அந்த காட்டு யானை பவானிசாகர் வனச்சரகத்துக்குட்பட்ட மங்களப்பட்டி தலமலை காப்புக்காடு வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.
கடந்த ஒரு ஆண்டாக அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை பிடிபட்டதால் கடம்பூர் பகுதியை சேர்