களைகட்டிய புத்தாண்டு: ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம் என 2025-ஐ உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்


தினத்தந்தி 1 Jan 2025 12:01 AM IST (Updated: 1 Jan 2025 10:34 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோவில்களிலும், தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சென்னை,

நாடு முழுவதும் 2025-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளது. அந்த வகையில், தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக, சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் சென்னையில் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராக இருந்தனர். பெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை பாதிப்புகள் இருந்து பொதுமக்கள் மீண்டு வந்து நள்ளிரவில் உற்சாகமாக ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர்.

புத்தாண்டை ஒட்டி சென்னையின் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை பூத்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள், பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. சென்னை காமராஜர் சாலையில், புத்தாண்டை வரவேற்க வண்ண விளக்குகளால் மணிக்கூண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.



புத்தாண்டை வரவேற்பதற்காக சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு அதிகளவில் மக்கள் வந்து இருந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரைகளில் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைத்து தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், நீலாங்கரை ஆகிய கடற்கரை பகுதிகளில் இரவு 7 மணிக்கு பிறகு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்களும், பொதுமக்களும் செல்லாத வகையில் இரும்பு தகடுகள் கொண்டு மூடப்பட்டது. மெரினா காமராஜர் சாலையில் இரவு 8 மணியளவில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் மாற்றுவழியில் திருப்பி விடப்பட்டது. இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரை மற்றும் பட்டினப்பாக்கம் உட்புறச் சாலையில் இன்று காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது.

மெரினா காமராஜர் சாலையில் புத்தாண்டை கொண்டாட வந்தவர்கள் திருவல்லிக்கேணி, சாந்தோம் ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு காமராஜர் சாலையில் நடந்தே வந்தனர். புத்தாண்டை வரவேற்கும் வகையில் காமராஜர் சாலையில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் அருகே மணிகூண்டு இருந்த பகுதி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரவு 8 மணிக்கு பிறகு இந்த பகுதியில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. புத்தாண்டை வரவேற்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரே இடத்தில் திரண்டனர்.

இந்நிலையில் சரியாக 12 மணி ஆனதும் அனைவரும் ஒன்று சேர்ந்து 'ஹேப்பி நியூ இயர்' என்று உற்சாகமாக குரல் எழுப்பியபடியும், கைகளை குலுக்கியும் இனிப்புகளையும் வழங்கி புத்தாண்டை வரவேற்றனர். வண்ண, வண்ண பலூன்களை பறக்கவிட்டனர். இதேபோல, விதவிதமான வகைகளில் கேக்குகளை கொண்டுவந்து அதை வெட்டி புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர், அருகில் இருந்தவர்களுக்கும் கேக்குகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். இதனால், மெரினா காமராஜர் சாலையில் உற்சாகம் கரைபுரண்டோடியது.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் சினிமா பாடல்களை ஒலிக்கவிட்டு இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாக நடனமாடி புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சென்னை சாந்தோம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோவிலில் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பெசன்ட் நகர் கடற்கரையில் முதல் ட்ரோன் ஷோ நடைபெற்றது. ஏலோ லைட் எனும் நிறுவனத்துடன் இணைந்து காவல் துறையினர் ட்ரோன் ஷோ நடத்தினர். நாகை வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, கோவை, குமரி நெல்லையில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புதுகோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் பேஷன் ஷோ நடைபெற்றது. ஒய்யார நடைபோட்டு பார்வையாளர்களை போட்டியாளர்கள் கவர்ந்தனர். தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும், புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆட்டம், பாட்டத்துடன் களைக்கட்டி 2025-ம் ஆண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். கடற்கரை, வழிபாட்டு தலம், நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டை மக்கள் திரளாக வரவேற்றனர். பட்டாசு தொழிற்சாலைகளின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாக, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொருட்காட்சி திடலில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. கோவையில் வாணவேடிக்கை, இன்னிசை கச்சேரிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

1 More update

Next Story