லாரியில் கொண்டு வந்த காற்றாலை இறக்கை சாலையில் சரிந்ததால் பரபரப்பு

கிரேன் மூலம் சாலை தடுப்பில் ஏறி நின்ற லாரியை மீட்டனர்.
மதுரை,
திண்டுக்கல்லில் இருந்து காற்றாலை இறக்கை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. வாடிப்பட்டி அருகே தனிச்சியம் மேம்பாலம் முடியும் இடத்தில் காலை 8 மணிக்கு வந்த போது திடீரென்று லாரியில் பழுது ஏற்பட்டது. இதனால் லாரியின் பின்பகுதி சாலையின் தடுப்பில் ஏறி நின்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக திண்டுக்கலில் இருந்து மதுரை சென்ற வாகனங்கள் செல்ல முடியாமல் வரிசையில் அணிவகுத்து நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த சமயநல்லூர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இதனால் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெல்ல, மெல்ல சென்றது. அதன்பின்னர் சம்பவ இடத்துக்கு கிரேன் வரவழைக்கப்பட்டது. கிரேன் மூலம் சாலை தடுப்பில் ஏறி நின்ற லாரியை மீட்டனர். பின்னர் அந்த லாரி தென்மாவட்டத்தை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின்னர் போக்குவரத்து முழுமையாக சீரானது.






