அரசு ஆஸ்பத்திரி ஊழியரிடம் முகநூல் மூலம் பழகி திருமணம் செய்வதாக ரூ.14 லட்சம் மோசடி செய்த பெண்

சென்னை அரசு ஆஸ்பத்திரி ஊழியரிடம் முகநூல் மூலம் பழகி திருமணம் செய்வதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அரசு ஆஸ்பத்திரி ஊழியரிடம் முகநூல் மூலம் பழகி திருமணம் செய்வதாக ரூ.14 லட்சம் மோசடி செய்த பெண்
Published on

சென்னையை அடுத்த புதுபெருங்களத்தூர், கலைஞர் நெடுஞ்சாலை, 6-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 40). இவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த சரண்யா(35) என்ற பெண் கடந்த சில வருடங்களுக்கு முன்பு முகநூல் மூலம் அறிமுகமானார்.

முகநூலில் இளமையாக உள்ள புகைப்படத்தை வைத்து தனக்கு திருமணம் ஆகவில்லை என கூறினார். அதன்பிறகு இருவரும் செல்போனில் பேசி நட்பை வளர்த்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் சரண்யா, நாகராஜனை திருமணம் செய்துகொள்வதாக கூறினார். இதை நம்பிய நாகராஜன், வீட்டு வாடகை, சொந்த செலவு, மருத்துவ செலவு என சரண்யா கேட்கும்போதெல்லாம் ஆன்லன் மூலம் பணம் அனுப்பினார்.

இவ்வாறு மொத்தம் ரூ.14 லட்சம் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகும் தொடர்ந்து பணம் கேட்டு வந்தார். ஒரு கட்டத்தில் நாகராஜன் பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டார்.

அத்துடன் தனக்கு பணப்பிரச்சினை ஏற்பட்டதாக கூறி தான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டார். ஆனால் சரண்யா, பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதுடன், அதன்பிறகு நாகராஜனுடன் பேசுவதையும் தவிர்த்து விட்டார்.

அதன்பிறகுதான் சரண்யா, திருமணம் செய்வதாக கூறி தன்னிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்ததை அறிந்த நாகராஜன், இதுபற்றி பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சரண்யா செல்போன் சிக்னலை வைத்து அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். அதில் சரண்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுடன் வசித்து வருவது தெரியவந்தது.

நாகராஜனுடன் முகநூல் மூலம் பழகி, அவரை திருமணம் செய்வதாக ஏமாற்றி பணத்தை பறித்து அதனை செலவு செய்துவிட்டதாகவும் அவர் கூறினார். சரண்யாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com