

சென்னை,
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 9 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. கிருமி பாதித்த ரத்தத்தை ஏற்றிய சம்பவத்தை போன்றே, சென்னை மாங்காட்டை சேர்ந்த 27 வயது பெண்ணும் கர்ப்பிணியாக இருந்த போது எச்.ஐ.வி. கிருமி பாதித்த ரத்தம் ஏற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். அவருடைய குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் வசந்தாமணி விளக்கம் அளித்திருந்தார்.
இந்தநிலையில் மாங்காட்டை சேர்ந்த அந்த பெண் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் நேற்று வந்தார். அங்கு அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எனக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி திருமணம் நடந்தது. எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 2017-ம் ஆண்டு மீண்டும் நான் கருவுற்றேன். மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதந்தோறும் தவறாமல் உடல் பரிசோதனை செய்து வந்தேன்.
முதல் மாதம் சென்றபோது எனக்கு எல்லாவித ரத்த பரிசோதனையும் செய்யப்பட்டது. டாக்டர்கள் அறிவுரைப்படி கடந்த மார்ச் 8-ந்தேதி அன்று மாங்காட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ரத்த பரிசோதனை செய்துக் கொண்டேன். எனக்கு எச்.ஐ.வி. இல்லை என்று சான்று வழங்கப்பட்டது.
5-வது மாத சோதனைக்காக கடந்த ஏப்ரல் 5-ந்தேதி மாங்காடு அரசு சுகாதார நிலையத்துக்கு சென்றேன். அப்போது எனது ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளது. ரத்த ஏற்ற வேண்டும் என்று 108 ஆம்புலன்சு வேன் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு பொது ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.
அங்கு டாக்டர்கள் எனது மருத்துவ குறிப்புகளை பார்த்துவிட்டு எனக்கு ரத்தம் ஏற்றினார்கள். பின்னர் 10 நாட்கள் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக இருந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன்.
மறுநாள் நான் மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று டாக்டரை சந்தித்தேன். அப்போது என்னுடைய ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சரியாக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்பின்னர் நான் மாதந்தோறும் பரிசோதனைக்கு சென்று வந்தேன்.
கடந்த ஆகஸ்டு 13-ந்தேதி அன்று ஸ்கேன் எடுக்க சொன்னார்கள். அதன்படி நான் ஸ்கேன் எடுத்து, அதன் ரிப்போர்ட்டை சுகாதார நிலையத்தில் காண்பித்தேன். அப்போது என்னுடைய வயிற்றில் குழந்தையின் தலை மேலே உள்ளது. உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
அதன்பேரில் நான் கடந்த ஆகஸ்டு 18-ந்தேதி அந்த ஆஸ்பத்திரிக்கு சென்றேன். எனக்கு எச்.ஐ.வி. ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில், எனது உடலில் எச்.ஐ.வி. கிருமி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
நான் அதிர்ச்சிக்கு உள்ளாகினேன். பின்னர் என்னையும், எனது கணவரையும் அழைத்து ஆலோசனை வழங்கினார்கள். நானும், எனது கணவரும் எங்களுடைய வாழ்க்கையை இப்படி சீரழித்து அளித்து வீட்டீர்களே? என்று சண்டை போட்டுவிட்டு வந்தோம்.
பின்னர் நான் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி மீண்டும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டேன். அன்றைய தினமே, அறுவை சிகிச்சை முறையில் ஆண் குழந்தையை பெற்று எடுத்தேன்.
அங்கு உள்ளவர்கள் டாக்டர்களை ஒன்றும் செய்ய முடியாது. சுகாதாரத்துறையிடம் புகார் அளிக்க கூறினார்கள். அதன்படி நானும் புகார் அளித்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நீங்கள் (போலீஸ் கமிஷனர்) எனக்கு எச்.ஐ.வி. நோய் தொற்று உள்ள ரத்தத்தை உடலில் ஏற்றிய கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீதும், பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புகார் மனுவுடன் மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் ஆஸ்பத்திரி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பெற்ற சிகிச்சை விவரங்களையும் அந்த பெண் அளித்தார்.