விவசாயத்தை காக்க வலியுறுத்தி கன்னியாகுமரி-காஷ்மீர் இடையே கார் பயணம் செய்யும் இளம் தம்பதி

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை விவசாயத்தை காக்க வலியுறுத்தி இளம் தம்பதியினர், தனது மகனுடன் காரில் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
விவசாயத்தை காக்க வலியுறுத்தி கன்னியாகுமரி-காஷ்மீர் இடையே கார் பயணம் செய்யும் இளம் தம்பதி
Published on

சென்னை,

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் அசோக் (வயது 31). இவரது மனைவி பிரபா (29). இந்த இளம் தம்பதியினருக்கு 4 வயதில் பிரபாஸ் என்ற மகனும் உள்ளார். திருப்பூரில் உள்ள சாயம் தயாரிக்கும் நிறுவனத்தில் மானேஜராக பணிபுரிந்து வந்த அசோக்குக்கு ஊர் ஊராக பயணம் மேற்கொள்வதில் பெரும் ஆர்வம் இருந்து வந்தது. இதையடுத்து கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பயணம் மேற்கொள்ளலாம் என தனது விருப்பத்தை மனைவி பிரபாவிடம் அசோக் தெரிவித்துள்ளார். முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபா, பின்னர் குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பயணத்துக்கான பணிகளை மேற்கொண்ட அசோக் தான் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து விலகினார். அதன்மூலம் வந்த பணத்தை கொண்டு கார் வாங்கியுள்ளார். இந்த காரில் பின் இருக்கைகளை அகற்றி அதில் படுக்கை வசதியும், சமையல் செய்ய தேவையான அடுப்பு, பாத்திரங்கள் வைக்கவும் பிரத்யேக வடிவமைப்பு மேற்கொண்டார்.

சென்னை வந்தடைந்தனர்

100 நாட்களில் பயணத்தை முடிக்க திட்டமிட்டு கடந்த ஜனவரி மாதம் 4 வயது மகனுடன் இந்த இளம் தம்பதியினர் தங்களது பயணத்தை திருப்பூரில் இருந்து தொடங்கினர். 87-வது நாளான நேற்று இந்த குடும்பத்தினர் சென்னை வந்தடைந்தனர். இந்த விழிப்புணர்வு பயணம் குறித்து அசோக் மற்றும் பிரபா கூறியதாவது:-

இந்தியாவின் 28 மாநிலங்களில் உள்ள முக்கிய புராதன சின்னங்கள், கோவில்களை பார்க்கவும், செல்லும் வழியில் விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டோம். அந்தவகையில் திருப்பூரில் இருந்து புறப்பட்ட நாங்கள் கேரளா, கோவா, மராட்டியம், ராஜஸ்தான் வழியாக காஷ்மீரை சென்றடைந்தோம்.

15,500 கி.மீட்டர்

பின்னர் உத்தரபிரதேசம் வழியாக அசாம், ஒடிசா, ஆந்திரா வழியாக மீண்டும் சென்னை வந்துள்ளோம். தற்போது புதுச்சேரி வழியாக ராமேசுவரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடம் சென்று கன்னியாகுமரியில் இந்த பயணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இதுவரை 15 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் இந்த காரில் பயணம் மேற்கொண்டுள்ளோம். நிர்ணயிக்கப்பட்ட நாட்களுக்கு முன்னதாகவே இந்த பயணத்தை முடிப்போம் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com