

ராமேசுவரம்,
பாம்பன் புதிய பாலத்தில் சென்றபோது ரெயிலில் இருந்து கடலில் குதித்தவர் உயிரிழந்தார்.
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் மதுரைக்கு பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரெயிலானது பாம்பன் புதிய பாலத்தில் சென்று கொண்டு இருந்தது. தூக்குப்பாலம் அருகே சென்றபோது திடீரென சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் இருந்து கடலில் குதித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள், இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே ரெயிலில் இருந்து குதித்தவரின் உடல் மண்டபம் அருகே நடுக்கடலில் உள்ள முள்ளிமுனை தீவில் கரை ஒதுங்கி கிடப்பதாக கடலோர போலீசாருக்கு தகவல் வந்தது. கடலோர போலீசார் மீனவர்கள் உதவியுடன் அந்த உடலை பார்வையிட்டனர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.