வீட்டில் தனியாக இருந்த 77 வயது மூதாட்டியை தாக்கி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது


வீட்டில் தனியாக இருந்த 77 வயது மூதாட்டியை தாக்கி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது
x

77 வயது மூதாட்டியிடம் வாலிபர் செலவுக்கு பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பெரிய பரவக்கல் பகுதியைச் சேர்ந்த பாண்டு என்பவரது மகன் அஜித்குமார் (வயது 24). மேளம் அடிக்கும் தொழிலாளியான இவர் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார். கடந்த 22-ந்தேதி ஒரு வீட்டிற்கு சென்ற அவர் அங்கு தனியாக இருந்த 77 வயது மூதாட்டியிடம் செலவுக்கு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அவரிடம் மூதாட்டி பணம் இல்லை என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அஜித்குமார் போதையில் மூதாட்டியை அடித்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் மூதாட்டி மயக்கம் அடைந்த நிலையில் அவர் இறந்து விட்டதாக நினைத்து அஜித்குமார் சென்று விட்டார். மறுநாள் காலை மூதாட்டி வீட்டுக்கு உறவினர் சென்றபோது அந்த மூதாட்டி காயத்துடன் இருந்துள்ளார்.

இது குறித்து அவரது பிள்ளைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது மகள் உடனடியாக தாயாரை பார்க்க வந்துள்ளார். அப்போது அஜித்குமார் பணம் கேட்டு தாக்கியதை மட்டும் தெரிவித்துள்ளார். பாலியல் பலாத்காரம் செய்தது பற்றி தெரிவிக்கவில்லை. அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தார். பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.

இந்த நிலையில் மூதாட்டி உடல் வலியால் துடித்துள்ளார் மேலும் நள்ளிரவில் பயந்தபடி அலறினார். இதனால் சந்தேகம் கொண்ட அவரது மகள் விசாரித்தபோது அஜித்குமார் பணம் கேட்டு வந்து பணம் இல்லை என கூறியதும் தன்னை நகத்தால் கீறியும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகள் உடனடியாக அவரது தாயாரை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மீண்டும் சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது தொடர்பாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் உத்தரவின் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story