

சென்னை,
கோவையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், சென்னை கிண்டியில் தோழிகளுடன் வாடகை வீட்டில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று அதிகாலை அவர் தங்கியிருந்த வீட்டின் குளியல் அறைக்கு சென்றபோது, ஜன்னல் வழியாக ஒருவர் செல்போனில் வீடியோ எடுப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக வெளியே சென்று அந்த நபரின் செல்போனை பறித்தார். அப்போது அந்த வாலிபர், இளம்பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி செல்போனை மீண்டும் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதனை கண்டதும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் குளியல் அறை அருகே பார்த்தபோது, மற்றொரு செல்போனும் அங்கு இருந்தது தெரியவந்தது. 2 செல்போன்களையும் கைப்பற்றி கிண்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து இதுபற்றி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், திருத்துறைப்பூண்டியை சேர்ந்த முல்லைநாதன் (31 வயது) என்பவர் பெண்கள் தங்கியிருந்த வீட்டின் அருகே நண்பர்களுடன் தங்கி இருப்பதும், பெண்கள் குளியல் அறைக்கு செல்லும்போது செல்போனில் வீடியோ எடுத்ததும் தெரியவந்தது. முல்லைநாதனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.