காதலனை திருமணம் செய்ய முடியாததால் இளம்பெண் தற்கொலை

இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
காதலனை திருமணம் செய்ய முடியாததால் இளம்பெண் தற்கொலை
Published on

குமரி,

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள சரல் உன்னங்குளத்தை சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இதில் கடைசி மகள் பவானி (வயது19). இவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு அழகு கலை பயிற்சி முடித்துள்ளார். இவர் உறவுக்கார வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், பவானிக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்கவும் அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி வேறு ஒரு வாலிபருடன் திருமண நிச்சயமும் செய்துள்ளனர். இதையடுத்து காதலனை திருமணம் செய்ய முடியாததால் கடந்த சில நாட்களாக பவானி மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பவானி தூக்கில் தொங்கினார். சிறிது நேரத்தில் வந்த குடும்பத்தினர் மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பவானி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதைகேட்டு அங்கிருந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதுகுறித்து அவரது தாயார் இசக்கியம்மாள் (55) வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதலனை திருமணம் செய்ய முடியாததால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com