கணவர் மதுவுக்கு அடிமையானதால் நிகழ்ந்த விபரீதம்.. துப்பாக்கியால் சுடப்பட்டதில் புதுப்பெண் பலி


கணவர் மதுவுக்கு அடிமையானதால் நிகழ்ந்த விபரீதம்..  துப்பாக்கியால் சுடப்பட்டதில் புதுப்பெண் பலி
x
தினத்தந்தி 18 July 2025 8:30 AM IST (Updated: 18 July 2025 8:54 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே கணவர் துப்பாக்கியால் சுடப்பட்டதில் புதுப்பெண் உயிரிழந்தார்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தென்னரசன் (வயது 28). இவருக்கும் திண்டிவனம் அடுத்த தெளி கிராமத்தை சேர்ந்த லாவண்யா (26) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

தென்னரசன் தினந்தோறும் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற தென்னரசனை லாவண்யா கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த தென்னரசன் வீட்டில் வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியை எடுத்து லாவண்யாவை சுட்டுள்ளார்.

இதை தடுக்க முயன்ற அவரது தாயாரான பச்சையம்மாளை அவர் துப்பாக்கியால் சுட்டார். இந்த சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசித்து வந்த வக்கீலும், உறவினருமான கார்த்திக் (28) என்பவர் விரைந்து சென்று தென்னரசனிடம் ஏன் இப்படி செய்கிறாய் என தட்டிக்கேட்டபோது அவரையும் தென்னரசன் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தென்னரசன் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாவண்யா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தென்னரசின் தாயாரான பச்சையம்மாள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து இந்த வழக்கை இரட்டை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story