

லாரி சக்கரத்தில் சிக்கி...
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள சோழிப்பாளையத்தில் வசிப்பவர் அருள்முருகன் (வயது 40). இவரது மனைவி அமுதா (36). இவர் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வாங்குவதற்காக சோழவரம் மார்க்கெட்டுக்கு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். இந்த நிலையில், சோழவரம் நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தபோது, அதை முந்தி செல்ல முயன்ற நிலையில், அமுதா மோட்டார் சைக்கிளில் இருந்து திடீரென கீழே தவறி விழுந்தார். அப்போது பின்புறம் வந்த லாரி அமுதா மீது ஏறி இறங்கியதில் லாரி சக்கரத்தில் சிக்கி கணவர் கண்முன்னே அவர் பரிதாபமாக பலியானார்.
டிரைவருக்கு வலைவீச்சு
இந்த விபத்தில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அருள்முருகனுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியாகி கிடந்த அமுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடி தலைமறைவான விபத்துக்கு காரணமான டிரைவரை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.