குடும்ப தகராறில் கிணற்றில் குதித்த இளம்பெண் - காப்பாற்ற முயன்ற கணவன் உயிரிழப்பு

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப தகராறில் கிணற்றில் குதித்த இளம்பெண் - காப்பாற்ற முயன்ற கணவன் உயிரிழப்பு
Published on

வேலூர்,

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (30 வயது), தொழிலாளி. இவரது மனைவி பிரேமகுமாரி (28 வயது). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பார்த்திபன் தினமும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த பிரேமகுமாரி, அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் மனைவியை காப்பாற்ற கிணற்றில் குதித்தார்.

அப்போது, கிணற்றில் இருந்த பாறையில் மோதி மயங்கி, தண்ணீரில் மூழ்கினார். உடனே பிரேமகுமாரி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அங்கு வந்த இளைஞர்கள் கிணற்றில் குதித்து பிரேமகுமாரியை காப்பாற்றி மேலே கொண்டு வந்தனர். ஆனால் பார்த்திபனை தேடிபார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தகவல் அறிந்ததும் ஒடுகத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மகேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் கிணற்றில் இறங்கி பார்த்திபனை தேடினர். சுமார் 1 மணி நேர தேடுதலுக்கு பிறகு அவரை பிணமாக மீட்டனர்.

வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com