மதுபோதையில் தகராறு செய்த கணவரை கத்தியால் குத்திக்கொன்ற இளம்பெண்

போலீசார் விரைந்து வந்து மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவரை கத்தியால் குத்திக்கொன்ற இளம்பெண்
Published on

விருதுநகர்,

மதுபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்த கணவரை ஆத்திரத்தில் கழுத்தில் கத்தியால் குத்தி அவருடைய மனைவியே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுபோதையில் தகராறு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உப்புத்தூர் கிராமம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் மணி (வயது 35). இவர் கூலி வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி திவ்யபாரதி (26). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை, இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. மேலும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் மணி அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

கத்தியால் கழுத்தில் குத்தினார்

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் மதுபோதையில் மணி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போதும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை தாக்க முயன்றதாகவும் தெரிகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த திவ்யபாரதி, கணவரை கீழே தள்ளிவிட்டதுடன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மணியின் கழுத்தில் குத்தியதாக தெரியவருகிறது. இதில் பலத்த காயம் அடைந்த மணி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

கைது

இந்த கொலை குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திவ்யபாரதியிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த கொலை குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திவ்யபாரதியை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com