முத்தம் கேட்டு அடம் பிடித்த ஏட்டு; தலைமறைவான இளம்பெண் - கண்டுபிடித்து தருமாறு கணவர் புகார்

ஏட்டுவின் லீலைகள் குறித்து அனைத்து ஆதாரங்களுடன் விரிவான விசாரணை அறிக்கை போலீஸ் கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கண்டுபிடித்து தருமாறு கணவர் புகார்
Published on: 

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியை சேர்ந்த 34 வயது நபருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் மீது மங்கலம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பல தீவிர குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் போலீசார் இவரை வரலாற்று பதிவேடு குற்றவாளி பட்டியலிட்டு தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவரது மனைவி திடீரென மாயமானார். உறவினர்கள் வீடு மற்றும் பல இடங்களில் தேடியும் மனைவி கிடைக்காததால் செய்வதறியாது தவித்த கணவர், மங்கலம் போலீஸ் நிலையத்தில் தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான பெண்ணை கண்டுபிடிக்க அவருடைய செல்போண் எண் மற்றும் டவர் லொகேஷன் மூலம் ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது வழக்கின் போக்கையே மாற்றியமைக்கும் அதிர்ச்சி தரும் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது. மங்கலம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் காவலர் ஒருவர், காணாமல் போன அந்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்ந்து பலமுறை தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்தது.

காவல்துறையின் விசாரணையில் மேலும் வெளிவந்த கூடுதல் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. குற்றவாளியை கண்காணிக்கும் சாக்கில் அவரது மனைவியின் செல்போன் எண்ணை பெற்ற அந்த ஏட்டு நாளடைவில் அப்பெண்ணுக்கு தொந்தரவு கொடுக்க தொடங்கி உள்ளார். குறிப்பாக தினமும் அப்பெண்ணுக்கு வீடியோ கால் செய்து எனக்கு ஒரு முத்தம் வேண்டும் கேட்டு கேட்டு அடம்பிடித்துள்ளார். மேலும் ஆபாசமாக பேசி ஆசைக்கு இணங்குமாறு மனரீதியாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளார்.

ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 30 முறைக்கும் மேலாக வீடியோ காலில் அழைத்து அப்பெண்ணை நிலைகுஅலைய வைத்தது விசாரணையில் அம்பலமானது.

போலீஸ் ஏட்டின் தொந்தரவு மற்றும் அலைக்கழிப்பு தாங்க முடியாமல் பயத்திலும் மன உளைச்சலிலும் அந்த பெண் வீட்டை விட்டு ஓடி மறைந்தாரா? அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடந்துள்ளதா? என்ற கோணத்திலும் தற்போது விசாரணை முடக்கி விடப்பட்டுள்ளது.

காவல்துறைக்கே களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட அந்த ஏட்டுவின் லீலைகள் குறித்து அனைத்து ஆதாரங்களுடன் விரிவான விசாரணை அறிக்கை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அறிக்கையை பரிசீலித்த கமிஷனர் ராஜேஸ்வரி குற்றச்சாட்டுக்கு உள்ளானபோலீஸ் ஏட்டை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து ஆயுதப்படைக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அவர் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றவாளியை கண்காணிக்க வேண்டிய போலீஸ் ஏட்டே அவரது மனைவியிடம் வீடியோ காலில் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் திருப்பூர் காவல் துறையினர் மற்றும் பொதுஅம்க்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X